ராசிபுரம் அருகே சட்டவிரோதமாக கனிமவள கடத்தலில் ஈடுபட்ட லாரிகளை சிறைபிடித்த பொதுமக்கள்..!

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே சட்ட விரோதமாக கடத்தப்படுவதாக குற்றச்சாட்டின் கீழ் கிராவல் மண், கிரானைட் கனிம வளங்கள் ஆகியவற்றை கடத்திச் சென்ற லாரிகளை பொதுமக்கள் சிறை பிடித்தனர்.

கோம்பைகாட்டில் உள்ள மலைக் குன்றுகளை சமூக விரோதிகள் சிலர் வெடி வைத்து தகர்த்து வருவதாகவும் அங்கு சட்ட விதிகளை மீறி கிராவல் மண் மற்றும் கனிம வளங்களை கடத்தி விற்பனை செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.இதுதொடர்பாக அப்பகுதி மக்கள் பலமுறை புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கடத்தலில் ஈடுபட்ட லாரி மற்றும் ஜேசிபி இயந்திரத்தை சிறை பிடித்து வெண்ணந்தூர் வட்டார வளர்ச்சி அலுவலருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.இது குறித்து பேசிய கிராம நிர்வாக அலுவலர் 2 மாதங்களுக்கு முன்பே கடத்தல் தொடர்பாக புகார் தெரிவித்ததாக கூறினார்.வட்டாட்சியர் கூறுகையில், கடத்தல் தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

^