துரைமுருகன் மற்றும் கதிர் ஆனந்தின் தற்போதைய நிலை

வேலூர் நாடாளுமன்ற தொகுதி என்பது வேலூர், அணைக்கட்டு, கீழவைத்தான்குப்பம் என்கிற கே.வி.குப்பம் (தனி), குடியாத்தம் (தனி), ஆம்பூர், வாணியம்பாடி என 6 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கியது ஆகும். இதில் வேலூர், அணைக்கட்டு என இரண்டு தொகுதிகளில் திமுக வெற்றி பெற்றது. மீதியுள்ள நான்கு தொகுதிகளில் அதிமுக வெற்றி பெற்றது. அதில் தற்போது, ஆம்பூர், குடியாத்தம் (தனி) என இரண்டு தொகுதிகள் காலியாக உள்ளது. இந்த தொகுதியில் தாழ்த்தப்பட்டவர்கள், இஸ்லாமியர்கள், கிறிஸ்த்துவர்கள், முதலியார்கள், வன்னியர்கள் வலிமையாக உள்ளார்கள். இஸ்லாமியர்கள் வாக்குகள் வெற்றியை தீர்மானிப்பவையாக உள்ளன. திமுக சார்பில் கதிர் ஆனந்த், அதிமுக சார்பில் அதன் கூட்டணி கட்சியான புதிய நீதி கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம், அமமுக சார்பில் முன்னாள் அமைச்சர் பாண்டு ரங்கன், மக்கள் நீதி மய்யம் சார்பில் சுரேஷ், நாம் தமிழர் கட்சி சார்பில் தீபா லக்ஷ்மி ஆகியோர் போட்டியிட உள்ளனர். அண்மையில் வேலூரில் துரைமுருகன் வீடு மற்றும் அலுவலகம் அவருக்கு நெருக்கமானவர்களின் வீடுகள், கதிர்ஆனந்த் கல்லூரி ஆகியவற்றில் நடைப்பெற்ற வருமான வரி சோதனை தமிழக அரசியல் களத்தின் கவனத்தை மொத்தமாக திருப்பியது. வருமான வரிச்தோனையில் சிக்கிய பெட்டி, பெட்டியாக பணம் அனைவரையும் திகைப்படைய செய்தது. இந்த பணம் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம் குறித்து வருமான வரித்துறையிடமிருந்து அறிக்கை பெற்று அதனை தலைமை தேர்தல் ஆணையத்துக்கு தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு அனுப்பினார். அந்த அறிக்கையினை பரிசீலித்த தேர்தல் ஆணையம், இந்த விவகாரம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்வதற்கு வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு உத்தரவு பிறப்பித்தது. அதனடிப்படையில் திமுக பொருளாளர் துரைமுருகனின் மகன் கதிர்ஆனந்த் மற்றும் திமுக பிரமுகர்கள் பூஞ்சோலை சீனிவாசன், தமோதிரன் ஆகியோர் மீது மூன்று பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. பிரிவு 125A மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951, வருமான வரிச்சட்டம் 171(E)rw 171(B) 2 IPC 2 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த நிலையில் வேலூரில் திமுக வட்டாரத்தில் என்ன நடக்கிறது என்பதை குறித்து அறிந்துக்கொள்ள முயற்சி மேற்கொண்டோம், அப்போது வேலூரில் உள்ள பத்திரிக்கையாளர் ஒருவரை தொடர்புகொண்டு இது குறித்து கேட்டறித்தோம் அப்போது அவர் கூறியதாவது :- "எப்போதுமே இல்லாத அளவுக்கு பணப்பட்டுவாடா இந்த தொகுதியில் அரங்கேறி உள்ளது. வெற்றி யாருக்கு என்பது தெரியாத நிலை தான் தற்போது வேலூரில் உள்ளது. டிடிவி தினகரனுக்கு தொகுதியில் அதிகமாக செல்வாக்கு இல்லை, ஆனால் அவருக்கு கூடும் கூட்டத்தை பார்க்கும் பொழுது நம்ப முடியாத அளவுக்கு ஆச்சர்யமாக உள்ளது." "திமுகவை பொறுத்தவரை கதிர் ஆனந்தை வேட்பாளாராக அறிவித்ததில் திமுகவினருக்கே விருப்பம் கிடையாது. கதிர் ஆனந்த் இருக்கும் ஒரே ஒரு தகுதி துரைமுருகன் மகன் என்ற அந்தஸ்த்து தான். தொகுதிக்குள்ளும், கட்சிக்குள்ளும் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தான் அவர் அறிமுகமாகி உள்ளார்." "அவரது கல்லூரிக்குள் திமுகவினர் சென்றாலே, கல்லூரிக்குள் கரைவேட்டி கட்டியவர்கள் வரக்கூடாது என்று கடுமையான வார்த்தைகளை உபோயகித்து அவர்களை வெளியேற்றுவது தான் கதிர் ஆனந்த் ஸ்டைல். துரைமுருகன் திமுகவில் இணைந்த போது அவருக்கு கட்சியில் சீனியராக இருந்தவர் சீவூர் துரைசாமி, துரைமுருகனின் நீண்ட கால நண்பரும் கூட அவர். கடந்த 5 வருடங்களுக்கு முன்பு கதிர் ஆனந்த கல்லுரிக்குள் அவர் சென்றபோது, அவருக்கும் இதே நிலை தான் ஏற்பட்டுள்ளது. அப்போது துரைமுருகனுக்காக அமைதியாக திரும்பினார். தற்போது கதிர் ஆனந்துக்கு வேட்பாளராக அறிவிக்கப்பட்டவுடன் மனமுடைந்து போன சீவூர் துரைசாமி பாமகவில் சென்று இணைந்துக்கொண்டார்." "தற்போது திமுகவில் துரைமுருகனுக்காக உள்ளவர்களும், கதிர் ஆனந்த் தேர்வானதில் அதிருப்தியில் தான் உள்ளனர். துரைமுருகனுக்காக களப்பணி மேற்கொண்டலும், கதிர் ஆனந்த் வெற்றி பெறக்கூடாது என்ற மனநிலையில் தான் அவர்களும் உள்ளனர்." "அண்மையில் பணம் சிக்கிய விவகாரம் திமுகவுக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது. இதில் திமுகவினரின் பினாமிகள் நிறைய பேர் சிக்கியுள்ளதாக சொல்லப்படுகிறது. கதிர் ஆனந்த் தேர்வானதில் அதிருப்தியில் உள்ள திமுகவினரும் இந்த ஐ.டி.ரெயிடு கண்டு மகிழ்ச்சியில் தான் உள்ளனர். இதே நிலை நீடித்தால் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் துரைமுருகனின் செல்வாக்கையும் மீறி மிகப்பெரிய பின்னடைவை சந்திக்க வாய்ப்பு உள்ளது என தெரிவித்தார்.

^