தி.மு.க.வின் தலைமை வட்டத்தை துவைத்தெடுக்கும் வன்னியரசு!

கடந்த சட்டமன்ற தேர்தலில் திருமாவும், வைகோவும் இணைந்து உருவாக்கிய மக்கள் நல கூட்டணியால் ஒத்த தொகுதியை கூட ஜெயிக்க முடியவில்லை. ஆனால் ஆட்சி கனவில் இருந்த தி.மு.க.வின் மொத்த ஆசையையும் கலைத்து கன்னாபின்னாவென கைமா செய்துவிட்டார்கள். இந்நிலையில் இப்போது நாடாளுமன்ற உள்ளிட்ட தேர்தல்களை மனதில் வைத்து தி.மு.க.வின் கூட்டணிக்கு திருமா, வைகோ, கம்யூனிஸ்டுகள் என நான்கு பேரும் வந்து நிற்கிறார்கள். இவர்களை நண்பர்களாக ஏற்றுக் கொண்டாலும் கூட, இன்னமும் கூட்டணி நபர்களாக தி.மு.அ. அங்கீகரிக்கவில்லை. அதேவேளையில் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் இவர்களின் 2016 சட்டமன்ற தேர்தல் துரோகத்தை வெச்சு செய்கிறது தி.மு.க. ஆனாலும் கம்யூனிஸ்டுகளை கூட தி.மு.க. தலைமை பெரிதாக காயப்படுத்துவதில்லை. ஆனால் விடுதலை சிறுத்தைகள் மற்றும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் இரண்டையும் வைத்து சாத்தி எடுக்கிறார்கள். அதில் முன்னணியில் இருப்பவர் துரைமுருகன். கடந்த சில வாரங்களுக்கு முன் இவர் வெடித்த வெட்டு எல்லோருக்கும் தெரியும். இந்நிலையில் சமீபத்திலும் கூட ‘தாலி கட்டினால்தான் மனைவி’ என்று சொல்லி, கூட்டணி அறிவிக்கப்பட்டால்தான் அதில் யார் யார் இருக்கிறார்கள் என தெரியவரும் என துரைமுருகன் போட்டுத் தாக்கினார். து.மு. இப்படி தொடர்ந்து துன்புறுத்தல் தருவதற்கு சமீபத்தில் பொளேர் பதில் சொல்லியிருக்கிறார் வி.சி.க.வின் துணைப் பொதுச்செயலாளர் வன்னியரசு. தன் பதிலில்...”எல்லா விஷயங்களையும் ஒரே மாதிரியாக பார்க்கக்கூடாது. அதேபோல் எல்லோரையும் ஒரே மாதிரி பார்க்கக்கூடாது. துரைமுருகன் தி.மு.க.வில் ஒரு சீனியர். ஆனால் அதேவேளையில் அவர் ஒரு இரண்டாம் கட்ட தலைவர்தான். அவரின் வழக்கமான கல்யாண உதாரணப் பேச்சானது அவரது கருத்துதானே தவிர தி.மு.க.வின் கருத்து அல்ல. தி.மு.க.வின் முன்னாள் தலைவரான கருணாநிதி எங்களிடம் நல்ல முறையில் இருந்தார். எங்கள் தலைவரை தன் மகன் போலவே பாவித்தார். புதிய தலைவரான ஸ்டாலினும் எங்களிடம் நல்லபடியாகத்தான் இருக்கிறார். எங்களுக்கு இவர்கள்தான் முக்கியமே தவிர, துரைமுருகன் போன்றோர் பேசியதையெல்லாம் ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்வதில்லை.” என்று வெளுத்துவிட்டார். தன்னையெல்லாம் வி.சி.க. கண்டுகொள்வதேயில்லை என்று சொல்லியிருக்கும் கருத்து துரைமுருகனை ஏக டென்ஷனாக்கியிருக்கிறதாம். எனவே கூடிய விரைவில் அடுத்தடுத்த நக்கல் ராக்கெட்டுகளை விடுதலை சிறுத்தைகள் மற்றும் வன்னியரசை நோக்கி அவர் பாய்ச்சலாம் என தெரிகிறது.

^