சந்தியாவின் இடுப்பு, முழங்கால் பகுதிகள் அடையாற்றில் கண்டெடுப்பு!

சென்னை பள்ளிக்கரணை பகுதியில் குப்பைக் கிடங்கில் இயந்திரத்தால் அறுக்கப்பட்ட பெண்ணின் வலது கை மற்றும் இரண்டு கால்கள் கண்டெடுக்கப்பட்டன. இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த பள்ளிக்கரணை போலீசார் உடல் உறுப்புகளில் இருந்த டாட்டூகளை வைத்து விசாரணையைத் தொடங்கினர். சென்னை உட்பட தமிழகம் முழுவதும் 30 முதல் 40 வயதுக்குட்பட்ட, காணாமல்போன பெண்களின் விவரங்களை ஆராயத் தொடங்கினர். இந்நிலையில், குப்பைக்கிடங்கில் இருந்து கைப்பற்றிய கை, கால்கள் தூத்துக்குடியைச் சேர்ந்த சந்தியாவுடையது என்பது தெரியவந்தது. குறிப்பாக சந்தியாவை அவரது கணவரும், காதல் இலவசம் படத்தை இயக்கியவருமான பாலகிருஷ்ணன் கொலை செய்தது தெரியவந்தது. இன்று (பிப்ரவரி 6) காலை பாலகிருஷ்ணனை கைது செய்த போலீசார் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். சந்தியாவின் மீத உடல் பாகங்களை தேடி வரும் போலீசார், பாலகிருஷ்ணனிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில், அப்பெண்ணின் இடுப்பு, முழங்கால் பாகங்களை அடையாறு ஆற்றில் கண்டெடுத்துள்ளனர். எனினும் சந்தியாவின் தலை உட்பட உடலின் மீத பாகங்கள் இன்னும் கிடைக்கவில்லை. இந்த சம்பவம் குறித்து சென்னை காவல் ஆணையர் விஸ்வநாதன், ”பள்ளிக்கரணை குப்பை கிடங்கில் கிடந்த கால்கள் மற்றும் கையை மாநிலம் முழுவதும் காணாமல் போனோர் பட்டியலுடன் ஒப்பிட்டு, கையில் இருந்த டாட்டூவின் மூலம் அந்த பெண் தூத்துக்குடியைச் சேர்ந்த சந்தியா என்பதை கண்டறிந்ததாகவும் இது தொடர்பாக நடைபெற்ற புலன் விசாரணையில் சந்தியாவின் கணவர் பாலகிருஷ்ணன்தான் குடும்ப பிரச்சனையின் காரணமாக அவரை கொன்றது கண்டுபிடிக்கப்பட்டதாகவும் தெரிவித்தார். மேலும் மீதமுள்ள உடல் பாகங்கள் எங்குள்ளது என்பது பற்றி தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் " அவர் குறிப்பிட்டார். தனது மகளுக்கு நேர்ந்த கொடூர சம்பவம் குறித்து செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த சந்தியாவின் தாய் பிரசன்னா, “ பாலகிருஷ்ணனுக்கு கடுமையான தண்டனை வாங்கித் தர வேண்டும் என்று கண்ணீர் மல்க கேட்டுக்கொண்டார். தனது மகளின் டாட்டூவை வைத்தே அடையாளம் தெரிவித்ததாக குறிப்பிட்ட பிரசன்னா, கணவன் மனைவிக்கு இடையே ஏற்படும் பொதுவான சண்டையாகத்தான் இருக்கும் என்று முதலில் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டேன் என்றார். தொடர்ந்து பேசிய அவர், ”மற்ற ஆண்களை வைத்து சந்தியாவின் உடம்பில் பாலகிருஷ்ணன் பச்சை குத்துவதாக என் மகள் என்னிடம் தெரிவித்தார். முடி வளர வளர மொட்டையடித்து விடுவதாகவும் கூறுவார். அவரது, நகைகளை பாலகிருஷ்ணன் அடகு வைத்துவிடுவார். செலவுக்கு பணமும் நான் கொடுத்து அனுப்புவேன். ஒரு கட்டத்தில் கணவருடன் வாழ முடியவில்லை என விவாகரத்து கேட்டு தூத்துக்குடி மகளிர் ஆணையத்தில் சந்தியா புகார் அளித்தார். இரு பிள்ளைகளுக்கு தாய் தந்தை ஆன பிறகு விவாகரத்து பெறுவது சரியல்ல என சமாதான படுத்தினேன். பின்னர் இருவரும் சென்னை வந்தனர். இங்கு வந்த பிறகு பாலகிருஷ்ணன் வேலைக்குச் செல்லாமல், சந்தியாவை வேலைக்கு அனுப்பினார். ஒருநாள் எனக்கு தொடர்பு கொண்டு, சந்தியா வெளிநாட்டுக்கு செல்ல பாஸ்போர்ட் உட்பட அனைத்து நடவடிக்கைகளும் எடுத்துவிட்டதாகத் தெரிவித்தார் பாலகிருஷ்ணன். ஆனால் இப்படி கொடுமைப்படுத்தி கொன்றது எனக்குத் தெரியாது என்று வேதனைத் தெரிவித்தார். எனது இரு பேர பிள்ளைகளும் பாலகிருஷ்ணன் சொந்த ஊரான தூத்துக்குடியில் உள்ளனர் என்று குறிப்பிட்டார்.

^