வேலை நிறுத்தம் இல்லை என்கிற உத்தரவாதத்தை உயர்நீதிமன்றத்தில் திரும்ப பெற்றது ஜாக்டோ ஜியோ

வேலை நிறுத்த போராட்டத்தை ஒத்திவைப்பதாக உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் அளித்த உறுதி மொழியை திரும்பப் பெற்ற ஜாக்டோ ஜியோ அமைப்பு, திட்டமிட்டபடி வேலை நிறுத்தம் நடைபெறும் என அறிவித்துள்ளது.

ஊதிய முரண்பாட்டைக் களைதல், பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்துதல் உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜேக்டோ ஜியோ அமைப்பினர் வேலை நிறுத்தப் போராட்டத்தை அறிவித்திருந்தனர். இதனை எதிர்த்து உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. நீதிமன்ற அறிவுரையை ஏற்று போராட்டத்தை ஒத்திவைப்பதாகக் கூறிய ஜேக்டோ ஜியோ, ஜனவரி 11ஆம் தேதிக்குள் 7அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கான ஆவணங்களை நீதிமன்றத்தில் அரசு சமர்ப்பிக்காவிட்டால் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடைபெறும் எனக் கூறியிருந்தது.

இந்நிலையில் இன்று வழக்கு நீதிபதிகள் சசிதரன், ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்தபோது சித்திக் குழுவின் அறிக்கை அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் ஏற்கனவே போதிய கால அவகாசத்தை வழங்கிய நிலையிலும் தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு தவறிவிட்டது என்று கூறிய ஜேக்டோ ஜியோ தரப்பு, போராட்டத்தில் ஈடுபட மாட்டோம் என வழங்கிய உறுதியை திரும்ப பெறுவதாக தெரிவித்தனர். அரசுத் தரப்பில் மேலும் நான்கு வார கால அவகசாம் கோரியும் அதனை ஜேக்டோ ஜியோ தரப்பு ஏற்க மறுத்துவிட்டது. எனவே திட்டமிட்டபடி வரும் 22ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் தொடரும் என ஜேக்டோ ஜியோ தரப்பில் கூறப்பட்டுள்ளது

^