திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகில் உள்ள இயற்கை எழில்சூழ்ந்த மலைகளுக்கு நடுவே வரும் தென்பெண்ணையாற்றின் கரையோரம் உள்ள திருப்பாறையில் பார்வதி தேவி குழந்தை பருவமாகபிறந்து ஸ்ரீ சென்னம்மாள் என்ற பெயரில் வளர்ந்து ஜீவசமாதியான இடம் உள்ளது. இந்த அம்மனுக்கு அருகே ஜீவசமாதியான வெள்ளையப்ப சித்தர், நவாப் ஆகியோரின் ஜீவ சமாதிகளும் உள்ளது. இவர்களை முறையே வணங்கினால் நினைத்தது நடக்கும் என்பது இங்குவரும் பக்தர்களின் தீராத நம்பிக்கை. பிரார்த்தனைகள் நிறைவேறியதும் அம்மனுக்கு பக்தர்கள் ஆடி மாதத்தில் பச்சை போட்டும் மொட்டை அடித்து கிடா வெட்யும் மூன்று தெய்வங்களையும் வழிபடுகின்றனர்.
பாறையில்நல்லெண்ணய் ஊற்றி பாம்பு கடித்தவருக்கு கொடுத்த மகான் !
நீப்பத்துறை கிராமத்திற்கு வெள்ளையப்ப சித்தர் என்ற ஒரு மகான் வந்திருந்தார். அந்த காலம் முதல் நீப்பத்துறைக்கும், அம்மாப்பேட்டைக்கும் இடையில் தென்பெண்ணையாறு ஓடியது, அவர் அங்கு வந்த பொழுது ஒரு சிறுவனை பாம்பு கடித்து, இறந்தவிட்ட சிறுவனை சுடுகாட்டிற்கு எடுத்துச்சென்றார்கள். அப்போது அப்பையன் எப்படி இறந்தான் என மகான் வினவ, அதற்கு பொது மக்கள் சிறுவனின் இறப்பைக் காரணம் காட்டி கூற, உடனே மகான், ‘சவத்தைக் கிழே வையுங்கள் நீங்கள் ஒரு புறமாக நில்லுங்கள்,” என்று கூறிவிட்டு, மறுபுறம் மகான் அமர்ந்து தியானம் செய்தார். உடனே சிறுவனைக் கடித்த பாம்பு மீண்டும் சிறுவனின் உடலுக்கருகில் வந்து முன்பு கடித்த இடத்தில் தன் வாயினால் விஷத்தை மீண்டும் எடுத்துச் செல்ல, அச்சிறுவன் உறங்கியவன் போல் உயிர் பிழைத்தெழுந்தான்.
அங்கிருந்த மக்கள் மகானின் பொற்பாதங்களில் விழுந்து வணங்கினார்கள்.
மகானைக் கடவுளாக வணங்கிச் சென்றார்கள். இப்போதுள்ள ஸ்ரீ வெங்கட்டரமண பெருமாள் கோவிலுக்கு வட புறத்தில் ஒரு ஈஸ்வரன் திருக்கோயிலில் மகான் அக்கோவிலிலேயே தங்கியிருந்தார்.
அப்பொழுது பாம்பு கடித்த சிறுவனின் பெற்றோர்கள்; பால் கொடுத்து உபசரித்தனர். அப்புறம் ஊரின் வடக்காகவும், நீப்பத்துறை, செங்கம் செல்லும் தார்சாலைக்கு கிழக்காக ஒரு பெரிய கற்குன்றில் தன்னுடைய ஞானத்தால் வேத மந்திரங்களைக் கல்லில் செதுக்கி, அரை அடி ஆழத்திற்கு பாறையில் துளைபோட வைத்து, அதில் நல்லெண்ணெய் மூன்று முறை ஊற்றி, இறங்கு முகமாக வழித்துச் சென்று பாம்பு கடித்தவருக்கு உள்ளிற்கு சாப்பிட வைத்த பலன் இதுவரை யாரும் இறந்தாக இல்லை. இன்றும் ஆயிரக் கணக்கானோர் இதை நடைமுறை செய்து வருகிறார்கள்.
அக்காலத்தில், வியாபார நிமித்தமாக மஞ்சவாடி கிராமத்தைச் சேர்ந்த தெலுங்கு செட்டியார்கள் பொதி மாட்டின் வாயிலாக மூட்டைகள் ஏற்றி வந்து வியாபாரம் செய்து வந்தனர். அந்த தருணத்தில் பொதிமாடு சுமைதாங்க முடியாமல் ஆற்றங்கரையில் படுத்துவிட்டது. வியாபாரி மிளகு மூட்டையை இறக்கியபின் மீண்டும் தூக்கினார். முதலில் இருந்த எடையைவிட அதிக கனமாக இருந்தது.
சந்தேகப்பட்டு மூட்டையை அவிழ்க்க, அம்மிளகு மூட்டைக்குள் நாராயணன் இராதா, ருக்குமணி மூன்று பஞ்சலோக சிலைகள் இருந்தன. அருகில் இருந்த வெள்ளையப்பர் சித்தரிடம் மூன்று சிலைகளை ஒப்படைத்தார். மகான் அதை நீங்களே எடுத்துச் செல்லுங்கள் உங்கள் வீட்டில் வைத்து தினந்தோறும் பூஜை செய்தால் குடும்பம் நன்கு வளர்ச்சி அடையும் எனக் கூறி சிலையைக் கொடுத்துவிட்டார். வியாபாரி பெற்றுச்சென்று தன்வீட்டில் வைத்துக்கொண்டார்.
நாவப் ஆண்டகாலத்தில் மாதம் மும்மாரி பெய்து மக்கள் மகிழ்ச்சியோடு வாழ்ந்தார்கள். அந்த நேரத்தில் மன்னர் நவாப் பெண்களின் பிரியராக இருந்தார். மணமான மகளிரைத் திரும்பிக்கூடப் பார்க்கமாட்டாரம்.
கிராமங்களில் தன் கண்களுக்கு அழகான பெண்கள் காணப்பட்டால் சேவகரின் மூலம் தன் ஆசையை நிவர்த்தி செய்து கொள்வாரம்.
பூலோகம் வந்து மன்னனை அடக்கிய அம்பாள் :
மன்னர் நவாப் செய்த அநீதிகளைக் கண்டு. பெண்களின் துயரைத்துடைக்க கைலாயத்திலுள்ள உமயவள் வேதனைப்பட்டு ஈஸ்வரனை நோக்கி, ‘சுவாமி பூலோகத்தில் நவாப் ஆட்சியில் கன்னிப்பெண்களின் கவலைபோக்க ஏதாவதொரு ஏற்பாடு தாங்கள் செய்தாகவேண்டும்,” என்று மன்றாடினார். ஈஸ்வரன் யோசித்து யாரை அவளிடம் அனுப்பினால் அவனை அடக்க முடியும் என்று சிந்திக்க, உமயவள் “ஏன் சுவாமி யோசனை”, என்று கேட்டார். ‘அவனை அடக்கத்தான் யோசனை,” என்றார். உடனே, ‘தாங்கள் உத்தரவு கொடுத்தால், நானே பூலோகம் சென்று அடக்கி வருகிறேன், என்று கூறினார். அப்படிச்செல்லும் பொழுது உனக்கு ஏதாவது விபரீதம் ஏற்பட்டால், உன் அண்ணன் நாராயணனை அழைத்தால் உனக்கு ஆபத்து நீங்கும்” என்றார். சமுத்திரம் என்ற சிற்றூரில் ஒரு விவசாயி வசித்து வந்தார்;. அவர் ஜவ்வாது மலையிலுள்ள சுனையருகில் ஒரு மரத்தடியில் குழந்தைவேண்டி தவம் செய்வார்.
குழந்தையாக அம்பாள் :
வழக்கம் போல் மாடுகளை காட்டில் விட்டு விட்டு மரத்தடியில் தவம் செய்யச்சென்றார். அங்கு உமையவள் குழந்தையாக இருந்தார்கள். அதைக்கண்ட விவசாயி தங்கமையமான தோற்றத்தில் கண்ட குழந்தையைப்பற்றி யோசித்தார். பிறகு ‘நமக்காகவே ஆண்டவன் இக்குழந்தையை அவதரிக்கச் செய்திருக்கிறார்,” என்று பெருமிதத்தோடு கையில் குழந்தையை எடுத்துக்கொண்டார். பின்பு மாடுகளை ஓட்டிக்கொண்டு வீடு திரும்பினார்.
குழந்தை எவ்வாறு கிடைத்தது என்று கேட்க, நடந்ததைக் கணவர் எடுத்துச் சொன்னார். உடனே அந்த அம்மையார் குழந்தையை தன் மார்போடு அணைக்க கொங்கையில் பால் தானாக சுரக்க, குழந்தையாக இருந்த உமையவள் பால் அருந்தினார்கள். இக்குழந்தையின் கதை சிறிது நேரத்தில் அனைத்து பகுதிகளிலும் காட்டுத் தீப்போல் பரவியது. அந்தக் குழந்தை அவ்வூருக்கு வந்ததிலிருந்து ஊரில் பிணியின்றியும், நல்ல செழிப்புடனும் காணப்பட்டது. குழந்தைக்கு ஐந்து வயதானது.
காதணி விழா :
குல தெய்வத்திற்கு காதணிவிழா செய்ய ஏற்பாடு செய்தார்கள். அச்சமயம் நாராயணன் ஓர் பிராமண ரூபங்கொண்டு அந்தவழியாகச் சென்றார். பெற்றோர்கள் அவரை அழைத்து, என் குழந்தைக்கு என்ன பெயர் வைக்கலாம் என்று கேட்க, அதற்கு அவர் சென்னம்மாள் என்ற பெயரை வையுங்கள். இந்த பெயர் இவ்வையகம் உள்ள வரை நிலைக்கும். ஆனால் இக்குழந்தை சுமார் 10,12 வயதிற்குள் இறந்துவிடும் என்று பிராமணர் சொல்ல, வளர்த்தவர்கள் மிகுந்த வருத்தமுற்றனர்.
காதணிவிழாவிற்குப் பிறகு சுமார் 9,10 வயதான பின்பு, வளர்த்தவர் களைப்பார்த்து ‘உங்களுக்கு வயதாகிவிட்டது மாடுகளை நான் மேய்த்து வருகிறேன். நீங்கள் போக வேண்டாம்”, என்று சொல்லினாள். இருப்பினும் அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. இருந்தும் அச்சிறுமியே மாடுகளை மேய்ப்பதற்காக காட்டிற்கு ஓட்டிச் சென்றாள். மாடு மேய்க்க தனியாகத்தான் செல்வதுண்டு. மாட்டை காட்டில் விட்டுவிட்டு, அச்சிறுமி தான் அவதரித்த இடத்தில் நாராயணனை நினைத்துப் பாடுவாள். அங்கு நாராயணன் தோன்றுவார். பின்பு இருவரும் பேசிக்கொண்டிருப்பார்கள். மாலையில் அவர் சென்று விடுவார், சிறுமி மாடுகளை வீட்டிற்கு ஓட்டிவந்துவிடுவாள். இதுபோன்று தினந்தோறும் இருவரும் உரையாடுவார்கள்.
பித்து பிடித்த நவாப் :
ஒரு நாள் நவாப் வரி வசூலுக்கு சமுத்திரம் வந்து, அவர்களின் தங்கும் இடத்தில் இருந்து கொண்டு, தன் சேவகர்களை அனுப்பி வரி வசூலித்தார். தங்கத்தைப் போன்ற மேனியும், கூந்தல் அழகும் கொண்டவளாக இருந்தாள். நவாப் திகைத்து போய் பித்துப்பிடித்தவன் போல் திகைக்க, தன் சேவகர்களை அழைத்து, ‘அங்கு மாடு ஓட்டிச்செல்லும் சிறுமியை நீங்கள் எப்படியாவது கொண்டுவந்து என்னிடம் ஒப்படைக்க வேண்டும்”, என்று கூறினார்.
சேவகர் பின் தொடர்ந்து சென்று சென்னம்மாள் தாய் தந்தையிடம், நவாப்பின் கூற்றை சொன்னார்கள், உடனே சென்னம்மாள், ‘ஏன்? பயப்படுகிறீர்கள். அனைவரும் நவாப்பிடம் போகலாமென,” அனைவரும் புறப்பட்டார்கள். சேவகார்கள் நவாப்பிடம் சென்னம்மாவின் பெற்றோர்கள் வந்ததாகத் தகவல் கொடுத்தார்கள். உடனே நவாப் பங்களாவிலிருந்து வெளியே வந்து பார்த்தார். ‘ஏன், என்னை இன்று ஒரு நாள்; இரவு மட்டும் ஆசைக்கிணங்க வரச் சொன்னீர்கள்? நீங்கள் மணம் செய்ய விரும்பினால் காலமெல்லாம் வாழ்க்கைத் துணைவியாக இருக்க நான் சம்மதிக்கிறேன்”, என்று கூற, பெருமகிழ்ச்சியுடன் நவாப் எப்பொழுது திருமணத்தை வைத்துக் கொள்ளலாமெனக் கேட்க, சென்னம்மாள் வரும் வெள்ளிக்கிழமை காலை 11 மணிக்கு மணக்கோலத்தோடு வாருங்கள் என்று சொன்னாள்.
தாய் தந்தையர் மகளைப் பார்த்து, ‘முரடனை எப்படி மணமுடிக்க சம்மதித்தாய்” எனக்கேட்க, ‘அதற்கு என் அண்ணன் நாராயணன் இருக்க எக்கவலையும் உங்களுக்கு வேண்டாம்” என்று சொன்னாள். வழக்கம் போல் மாடுகளை மேய்க்க காட்டிற்குச் சென்றதும், அண்ணனைத் துதிக்க அவர் அங்கு நேரில் தோன்றினார். நடந்த நிகழ்வுகளை அண்ணனிடம் எடுத்துக் கூறினாள் தங்கை. அதற்கு நாராயணன், ‘உன் பெற்றோர்களிடம் நீ உட்காரும் அளவிற்கு (பேழை) பெட்டி ஒன்று செய்யச் சொல்லவும். நான் வெள்ளிக்கிழமை விடியற்காலை 5 மணிக்கு வயதான பிராமண ரூபத்தில் தோற்றமளிப்பேன் நான் உனக்கு மட்டும் தான் தெரிவேன், என்று கூறினார்.
இத்தகவல் தன் பெற்றோரிடம் எடுத்துச்சொல்லி அவ்வாறே பேழையை செய்துவைத்திருந்தார்கள். வெள்ளிக்கிழமை காலை 5 மணிக்கு பகவான் வயதான பிராமண ரூபத்தில் தோன்றினார். சென்னம்மாள் பெற்றோர்களுடன் வீட்டைப் பூட்டிக்கொண்டு பேழையுடன் தெற்கு முகமாக புறப்பட்டு வந்தாள்.
நவாப் வெள்ளிக்கிழமை 11.00 மணியளவில் மணக் கோலத்துடன் சமுத்திரம் என்ற ஊரில் சேவகர்களுடன் வந்து சேர்ந்தார். நவாப், தன் சேவகர்களிடம் சொல்லி, பெண்ணையும் பெற்றோர்களையும் அழைத்துவர ஆணையிட்டர். சேவகர்கள் சென்னமாள் வீட்டிற்குச் சென்று பார்த்த பொழுது வீடு பூட்டப்படிருந்தது.
பாறைகள் வெடித்து படைகள் பள்ளத்தில் விழுந்தது.
உடனேநவாப்யிடம் சேவகர்கள் நடந்ததைச்சொல்ல, நாவப் கோபத்துடன் தன் படையுடன் தெற்கு நோக்கி வந்தார். சென்னம்மாள் சென்ற வழியை அறிந்து படையுடன் அந்த வழியே சென்றார்கள். படையைக்கண்ட பகவான், ‘இனி இவர்களைக் காப்பாற்ற வேண்டுமென்ற எண்ணத்தோடு பெற்றோர்களிடம், அந்தப் பேழையை நடு ஆற்றில் வைத்துவிட்டு அக்கரைக்குச் சென்று விடுங்கள்” என்றார். உடனே பகவான் மேற்குமுகமாகத் திரும்பி, ‘அனுமந்தா உன் கங்கை தீர்த்தம் பெருகட்டும், இரு கரையும் தண்ணீர் புரண்டு வரவேண்டும்,” மென்று பகவான் கட்டளையிட்டார்.
நவாப்புக்கு கோபம் அதிகரித்து, படைவீரர்களிடம் எட்டிபிடித்து பேழையைத் தொடும் போது சப்த கன்னியர்களின் மகிமையால் ஆற்றில் உள்ள பாறை வெடித்து படைகளெல்லாம் பள்ளத்தில் விழுந்து மாண்டு விட்டனர். சென்னம்மாளும் நிலைதடு மாறும் பொழுது சப்த கன்னியர்களால் காப்பாற்றப்பட்டு, ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டாள். அந்தக் கன்னியரின் மகிமையால் சுமார் 5000, அடி நீளமும் 300 அடி, ஆழமும், 150 அடி அகலமும், இருந்த பள்ளம். இங்குதான் தாம்பல் என்ற இடத்தில் தூவல் அருவியுள்ளது அந்த 7 கன்னியரும் அந்த பாறை வெடித்த இடத்திலேயே தங்கிவிட்டார்.
சிவபெருமான் உதயமாகி தன் பக்தனாகிய சித்தரிடம் ‘வருபவள்” உமையவள் தான். அக்கரையில் அழுகிறவர்கள் அவளை வளர்த்த தாய் தந்தையர்கள்தான். இக்கரையில் வரும் நவாப் அவள் பெயரில் ஆசைப்பட்டு அடைய முயற்சித்து வருகிறான்”. என்று கூறிவிட்டு, ‘இனி எல்லாம் உன் மகிமைதான்”, என்று கூறிவிட்டு ஈஸ்வரன் மறைந்தார்.
வட்டப்பாறையில் சென்னம்மாள் :
உடனே சித்தர் அந்த நடு ஆற்றில் உள்ள பெரிய பாறையில் சென்னம்மாவை மறைத்து விடுகிறார். தாய் தந்தையர்கள் தன் மகள் நீரில் முழ்கி இறந்துவிட்டாள். என்று முடிவு செய்து. ஆற்றில் தலை முழுகிவிட்டு குழந்தை இறந்தால் நாம் குழந்தைகளுக்கு படைப்பதைப் போன்று சென்னியம்மகளுக்கு பூ, பொறிகடலை, தேங்காய், கற்பூரம், மஞ்சள், குங்குமம், காதோலை கருமணி, அவல் தின்பண்டங்கள் வைத்து கும்பிட்டுவிட்டுச் சென்றுவிட்டார்கள்.
சென்னம்மாளால் என் படைகளெல்லாம் மாண்டு விட்டன. என் இராஜ்ஜியம் என் மனைவி, மக்களையும் இழந்து பைத்தியக் காரனாக இருக்கிறேன்.” என்று கூறினார். சித்தர் உடனே அவனுக்கு ஞானப்பார்வையை உண்டாக்கினார். அவனுக்கு, அந்த துர்மார்க்க புத்திமாறி சாந்த மாகி மகானிடத்தில், ’என்னுடைய கண்ணைத் திறந்து விட்டீர்கள். இனி நான் உங்களிடமே இருந்து விடுகிறேன்” எனக் கூறினார்.
சித்தரின் சாபம் :
அந்த காலத்தில் அம்மாப்பேட்டை, நீப்பத்துறை, கொட்டாவூர் மூன்று கிராம மக்கள் தென் பெண்ணையாற்றில் தான் தண்ணீர் எடுத்துச் செல்ல வேண்டும். சென்னம்மாள், சித்தர், நவாப் மூவரும் ஆற்றில் அமர்ந்து பேசிக் கொண்டிருப்பார்கள். அதைக்கண்ட மூன்று ஊர் பெண்கள் இவர்களைத் தவறான நோக்கத்தோடு பேசுவதும் வழக்கம். ஒரு நாள், ஒரு பெண் இன்னொரு பெண்ணிடத்தில், சித்தருக்கும், அந்தப் பெண்ணுக்கும் ஏதோ தொடர்பு இருக்கிறது என்று கூற, அந்த பெண்ணும் ‘ஆமாம்” என்று கூற, இந்த வார்த்தை சித்தர் காதில் விழ, உடனே கோபத்துடன், ஆதியில்லா அம்மா பேட்டை, நீதியில்லா நீப்பத்துறை, கோள் சொல்லும் கொட்டாவூர்; என்று சாபம் கொடுத்துவிட்டு, இந்த உலகம் அழியும் வரையில் இந்த மூன்று ஊரில் உள்ளவர்கள் குடும்பங்கள் முன்னுக்கு வரமுடியாது என்று சாபம் இட்டார். சித்தர், ‘இனி நாம் மூவரும் வீர சமாதி அடைந்து விட வேண்டும். சில காலங்கள் சென்று இங்கு என்ன நடக்குமென்று இப்போதுநான் கூறிவிடுறேன். என்னுடைய சமாதியின் மேல் அந்தயாதவரிடம் கொடுத்த சிலைகளை வைத்து பூஜை செய்து வருவார்கள். பல ஆண்டுகளுக்குப்பிறகு என் சமாதியின் மேல் ஒரு கோவில் கட்டப்படும். அதற்கு மூலவர் (கல்சிலை) சிலை வைக்கமாட்டர்கள். உற்சவ மூர்த்தி சிலைகள் மட்டும் வைப்பார்கள் என்று கூறினார்.
சென்னம்மாவைப்பார்த்து, ‘உன்னை நான் நடு ஆற்றில் மறைத்தபாறையில் ஜீவ சமாதியடைந்து விட வேண்டும், என்றும், நவாப்பை பார்த்து ஊருக்கு வடக்கே ஆலமரத்தடியில் ஜீவ சமாதியடைய வேண்டும். என்றும் உத்திரவிட்டார். கலியுகத்தில் உனக்கு சிறிய ஆலயம் ஒன்று கட்டுவார்கள்”. என்று சொன்னார். ‘மக்கள் கலியுகத்தில் தங்களின் நன்மைகளுக்காவும், தாங்கள் செய்யும்தவறுகளுக்கு பிராயசித்தம் தேடியும், தங்கள் குடும்பவளர்ச்சிக்காகவும் பிரார்த்தினை செய்து கொண்டு இங்கு வருவார்கள் அப்படி வருபவர்கள். அனுமன் தீர்த்தத்தில் குளித்து விட்டு தீர்த்தமலை சென்றுஸ்ரீ ராமர் தீர்த்தத்தில் குளித்துவிட்டு, நீப்பத்துறைக்கு வரும் பொழுது புதிய மூங்கில் கூடையில் பச்சை சாமான்களுடன், மஞ்சள் ஆடை உடுத்திக்கொண்டு, பம்பை, சிலம்புடன் வந்து தென்பெண்ணையில் நீராடி முடியெடுத்துவிட்டு உனக்கு (சென்னம்மாள்) பச்சை போட்டு கற்பூரம் ஏற்றிவிட்டு கோவிந்தா என்று மூன்று முறை அழைப்பார்கள். உனக்கு பச்சைப் போடும் பொழுது உன் அண்ணனை அழைத்துவிட்டு (நாராயணனை) பிறகு தான் உன்னை வணங்குவார்கள். கரையின்மேலே ஸ்ரீ பிரசன்ன வெங்கட்டரமணபெருமாள் கோவிலுக்கு அபிஷேகம் கொடுத்து, பூஜை முடித்து காதுகுத்தி, பெயர் வைத்து உற்சவம் செய்வார்கள் மூன்றாம் நாள் நவாப் (ஆளுடையான்) ஜீவசமாதியடைந்த இடத்திற்குச் சென்று ஆடு, கோழி, பலி கொடுத்து சமைத்து சாப்பிட்டு விட்டுச்செல்வார்கள் என்றார். இம்மூன்று ஆலயங்களுக்கும் முறைப்படி வணங்குபவர்களுக்கு மூன்று தெய்வங்களின் அருள் கிடைக்கும், என்று கூறினார். இன்றும் தொடர்ந்து இவ்வழிபாடு முறையைக் பக்தர்கள் கடைப்பிடித்து வருகின்றனர்.
ஆடி தமிழ் மாதம் 18 பிரம்மோற்சவம் ஒவ்வொரு ஆண்டும் ஆடி 13 முதல் ஆடி 22 வரை நடைபெற்று வருகிறது.
அமைவிடம் :திருவண்ணாமலையில் இருந்து 60 கி.மீ தூரத்திலும், தர்மபுரி மாவட்டம் தீர்த்தமலையில் இருந்து 12 கி.மீ தூரத்தில் உள்ளது.
தொடர்புக்கு :அருள்மிகு சென்னம்மாள் வெங்கட்டராம பெருமாள் கோயில், பரம்பரை அறங்காவலர்கள், நீப்பத்துறை,
என்.எஸ்.வெங்கட்ராம பிள்ளைக்குபின், அவரது மகன்கள்
திரு. வெ.செல்வரங்கன்- 9443624643, திரு. வெ.கோகுலவாணர் – 9443492588
செய்தி : ப.பரசுராமன்