சென்னையில் ஒரு திருக்கடையூர்

தென்னாடுடைய சிவனே போற்றி

என்னாட்டவருக்கும் இறைவா போற்றி

சென்னை அண்ணாநகர் 15வது பிரதானசாலை அரங்கநாதன் தோட்டத்தில் பல நூற்றாண்டு களுக்கு முன் சாய்ந்த நிலையில் மண்ணுக்குள் புதைந்த நிலையில் இருந்த பெரிய சூரிய பிம்ப வகையைச் சேர்ந்த சிவலிங்கம் இருப்பதை 1968 ஆம் ஆண்டு கண்டெடுத்தனர். பின்னர் தற்காலிக மேற்கூரை அமைத்து அப்பகுதி மக்கள் வழிப்பட்டு வந்தனர்;. இப்போது 42 அடி உயரத்தில் தெற்கு நோக்கிவாறு சிற்பவேலைபாடுகளுடன் அழகிய ஐந்து நிலை ராஜகோபுரம் கட்டப்பட்டு கருவறையில் சிவபெருமான் காட்சி தருகிறாh.; இங்கு சிவபெருமான் அம்பாள் ஸ்ரீதிரிபுர சுந்தரியுடன் ஸ்ரீசந்திரமௌலீஸ்வரர் என்ற பெயரில் அருள்பாலிக்கிறார்.இவரை உடல்நலம் பாதிக்கப்பட்டவர்களும் மரண பயம் உள்ளவர்களும் இத்தலத்திற்கு வந்து எம பயம் போக்கும் ம்ருத்ஞ்ய ஜெய ஜெபம் செய்தால் நோய் நீங்கி ஆயுள் பலம் பெற்று புத்துணர்ச்சியுடன் செல்லலாம் என்பது இங்கு வரும் பக்தர்களின் நம்பிக்கையாகவே உள்ளது. பிராத்தனைகள் நிறைவேறியதும் சுவாமி அம்பாளுக்கு பால் அபிஷேகம் செய்து புதுவஸ்திரம் சாத்தியும் சிலர் அவரவர் வசதிக்கேற்ப்ப தங்களின் வேண்டுதல்களை நிறைவேற்றி கொள்கின்றனர். மேலும் குழந்தைபாக்கியம் இல்லாதவர்களும் பதவி உயர்வு கோர்ட் வழக்குகளில் சிக்கி தவிப்பவர்களும் கல்வி செல்வம் வேள்விகளில் சிறக்கவும் இவரை வணங்கி மனதார வேண்டிக்கொண்டால்; வெற்றி நிச்சயம் என்பது இத்தலத்தின் ஐதீகமாக உள்ளது. இத்தலத்தில் தல விருட்சமாக வில்வமரம் உள்ளது.

ஏக வில்வம் ”சிவார்ப்பனம்” என்பார். அத்தனை மகத்துவம் வாய்ந்தது வில்வம். இதன் இலை, பூ, பிஞ்சு, காய், பழம், வேர், பிசின், பட்டையோடு, அனைத்தும் மருத்துவ பயன்கள் கொண்டவை.

திருக்கடையூர் கால சம்ஹார மூர்த்தியை சென்று வணங்க முடியாதவர்கள் இத்தலத்தையே பரிகார ஸ்தலமாக எண்ணி பக்தர்கள் வந்து வணங்கி செல்கின்றனர். சஷ்டியப்தபூர்த்தி உக்ரரத சாந்தி பீமரத சாந்தி சதாபிஷேகம் ஜன்ம நட்சத்திரம் ஆயுஷ்ய ஹோமம் செய்வதற்கு பரிகாரத் தலமாக உள்ளது. 59 வயது முடிந்து 60 வயது தொடங்குகிறவர்கள் உக்ரரத சாந்தி பூஜை செய்கிறார்கள் 60 வயது பூர்த்தியடைந்து 61 வயது தொடங்குகிறவர்கள் சஷ்டியப்தபூஜை செய்கிறார்கள். 80 வயது பூர்த்தியாகி 81 வயது தொடங்குகிறவர்கள் சதாபிஷேகம் மற்றும் ஆயுஷ்ய ஹோமம் செய்கிறார்கள் அறுபது வயது பூர்த்தியாகி தமிழ் வருடம் தமிழ் மாதம் அவரவர் பிறந்த தேதி அன்று சஷ்டியப் பூர்த்தி ( மணிவிழா) செய்துக்கொள்ள சென்னை மட்டுமின்றி பல பகுதிகளில் இருந்தும் இத்தலத்திற்கு பக்தர்கள் வருகிறார்கள். மேலும் ஜாதக ரீதியான தோஷங்களுக்கும் இத்தலத்தில் வழிப்படுகின்றனர்.

இங்குள்ள அம்பாள் ஸ்ரீ திரிபுர சுந்தரி தன்னை நாடி வரும் பக்தர்களை தாயுள்ளத்தோடு வாவென்று வரங்களை வழங்கி வள்ளலாக திகழ்கிறாள். இந்த அம்பாளை பௌர்ணமியில் நடக்கும் லலிதாஸஹஸ்ரநாம த்தில் கூடிய த்ரியதீயில் திருமணமாகத பெண்கள் கலந்துக்கொண்டு நெய்தீபம் ஏற்றினால் நிச்சயம் திருமணம் விரைவில் கைகூடும் என்பது அம்பாள் மீது நம்பிக்கை வைத்திருக்கும் பெண்களின் நம்பிக்கையாகவே உள்ளது. மேலும் இத்திருக்கோயிலின் நுழைவுவாயில் கிழக்குப் புறம் அமைக்க இயலாத நிலையில் தெற்குப்புறம் இயற்கையாகவே அமைந்துள்ளது சிறப்பான ஒன்றாகும். ‘பரிகாரத் தலம்” எனத் தொன்று தொட்டு வணங்கப்பட்டு வரும் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவில்-திருச்செந்தூர், அருள்மிகு சுவாமிநாத திருக்கோவில்-சுவாமிமலை, அருள்மிகு வடபழநி ஆண்டவர் திருக்கோவில்-வடபழநி இயற்கையாகவே தெற்குப் புறம் நுழைவு வாயில் அமைந்துள்ளதைக் கருத்தில் கொள்ளலாம்.

 

இந்த தெற்குப்புற அமைப்பின் காரணமாக, இத்திருக்கோவிலுக்கு வருகை தரும் பக்தர்கள் அனைவரும் அருள்மிகு சந்திரமௌலீசுவரர் திருக்கோவிலைப் பரிகாரத் தலமாக வழிபட்டுப் பெரும் பயனடைந்து வருகின்றனர். தமிழகத்தின் தலைநகரம் சென்னையம்பதியில் திருவொற்றியூர் தியாகராசர், பாடி திருவாலீசுவரர், திருவான்மியூர் மருந்தீசுவரர் மயிலை கபாலீசுவரர் ஆகிய நான்கு திருக்கோவில்கள் நால்வர்களால் பாடல் பெற்ற திருத்தலங்களாகும். தற்சமயம் அண்ணாநகர் பகுதியை ஒட்டிய திருமங்கலத்தில் பல நூற்றாண்டுகளுக்கு முன்பாக ‘பாலீஸ்வரர்” என்ற பெயருடன் வணங்கி வழிபட்ட இத்திருக்கோயில் தற்சமயம் அருள்மிகு சந்திர மௌலீசுவரர் திருக்கோயில் என வழக்கத்தில் உள்ளது. 

1968ஆம் ஆண்டு உலக வர்த்தகப் பொருட்காட்சி முடிவற்ற பின்னர், இப்பகுதி அண்ணாநகர் என பெயரிட்டுத் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் கையகப்படுத்திக் கொண்டு வீட்டு மனைகளாக பிரித்து ஒதுக்கீடு செய்யப்பட்டு வந்த பகுதியினை ஒட்டி வெற்றிடமாக இருந்த தற்பொழுது இத்திருக்கோயில் அமைந்துள்ள பகுதியில் சாய்ந்து மண்ணுக்குள் புதைந்த நிலையில் ஒரு பெரிய சு10ரிய பிம்ப வகையைச் சார்ந்த சிவலிங்கம் இருப்பதை இறையன்பர்கள் கண்ணுற்றனர். அவர்களின் பெருமுயற்சியினால், புதையுண்ட சிவலிங்கம் நிலைப்படுத்தப்பட்டு தற்காலிகமாக மேல்கூரை வேய்ந்து, வழிபாடு செய்யப்பட்டு வந்தது. 

1970 ஆம் ஆண்டு முதல் இப்பகுதி மக்கள் சிவலிங்கத்தை வழிபட்டு வந்ததோடு, உலகறிய செய்யும் வகையில் காஞ்சி ஸ்ரீ மகா பெரியவர் அவர்களை, ஆன்ம நேய அன்பர்கள் நேரில் சந்தித்துப் பாலீஸ்வரர் கோவில் பற்றிய விபரத்தை தெரிவித்தனர். ஆன்மாக்களின் கருமேனிகளைக் கழிப்பதற்காகத் திருமேனி கொண்டருளிய சிவபெருமானின் திருக்கோலங்களை 25 திருமூர்த்தங்களாகப் பெரியோர்கள் கூறுவர். அவற்றுள் சந்திரமௌலீசுவரர் என்னும் திருமூர்த்தமும் ஒன்றாகும். ஸ்ரீமகாப் பெரியவர் இச்சிவலிங்கத்திற்கு சந்திரமௌலீசுவரர் எனப் பெயரிட்டு வழக்கத்தில் கொண்டுவரவும், திரிபுரசுந்தரி என அம்பாள் சன்னதி அமைத்தும், இதர சன்னதிகள் அமைத்து வழிபடவும் அறிவுரை வழங்கி ஆசி தந்துள்ளார்கள். இப்பகுதி வாழ் பொதுமக்களின் ஆதரவோடு தொடக்க காலத்தில் சுவாமி சன்னதி, அம்பாள் சன்னதி, நந்தி தேவர், நவக்கிரகங்கள் சன்னதி, துவார விநாயகர், துவார முருகன், சுவாமி அய்யப்பன் மற்றும் சண்டிகேஸ்வரர் சன்னதிகள் அமைத்து 1978ஆம்ஆண்டு மற்றும் 2017ஆம் ஆண்டிலும் குடமுழுக்கு நன்னீராட்டு விழா நடைபெற்றுள்ளது.

இத்திருக்கோயிலைச் சுற்றியள்ள பகுதிகளில் வசித்து வரும் ஆர்வத்துடன் பங்கு பெற விரும்பியவர்களை உடன் சேர்த்து அண்ணாநகர் சமய பண்பாட்டு அறக்கட்டளையை தொடங்கி 13-10-78ல் எண். 1369/78 ஆக வடசென்னை மாவட்டப் பதிவாளர் முன் பதிவு செய்யப்பட்டு சீரிய முறையில் செயல்பட்டு வருகிறது. மேலும் அண்ணாநகர் சமய பண்பாட்டு அறக்கட்டளை இத்திருக்கோவிலை பராமரித்து நிர்வகிப்பதற்கான பரம்பரை அறங்காவலர் என சென்னை-34, இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை, துணை ஆணையரால் 1986 -ல் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. 

இத்திருக்கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கைப் பெருகி வந்துள்ளதாலும், வேண்டுவார்க்கு வேண்டும் வரமளித்து அருள் வழங்கி வருவதினாலும், அருள்மிகு சந்திரமௌலீசுவரர் திருக்கோவிலில் 1996 ஆம் ஆண்டு வரசித்தி விநாயகர் சன்னதி, வள்ளி தேவானை உடனுறை கல்யாண சுப்பரமணியர் சன்னதி, ஆஞ்சநேயர் சன்னதி, கால பைரவர் சன்னதி,சிவகாமி உடனுறை உற்சவர் (நடராசர்), கொடி மரம் ஆகியவை நிருமாணிக்கப்பட்டு சிறப்பான முறையில் திருக் குடமுழுக்கு நடைபெற்றது. இதன் மூலம் பெருவாரியான பக்தர்கள் பயன்பெற்று வருவதும், மேலும் இதரத் திருவிழா நாட்களில் பெருவாரியான பக்தர்கள் திரண்டு வந்து தரிசித்து நற்பயன்கள் அடைவதும் கண்கூடான உண்மை. நாடாண்ட மன்னர்கள் மக்களுக்கு இறை வழிபாட்டை உணர்த்தவும் தர்ம நெறிகளை கடை பிடிக்கவும் இமயம் முதல் குமரி வரை கோவில்களை கட்டி வழிபட உணர்த்தினார்கள். இராஜராஜசோழ மன்னன் காலத்தில் கட்டிய கோவில்கள் கலை நயம் மிக்க சிற்பவேலை பாடுகளுடன் கற்கோவில்கள் கட்டப்பட்டது. இக்கோவில்கள் பெரும் பண்பாட்டு மயமாக திகழ்ந்தது. சுவதர்மம் படிக்கப்பட்டது. பாடல் பாராயணம் செய்யப்பட்டது. கோவில் ஒரு பண்பாட்டு மய்யமாக  அந்நாளில் விளங்கியது.

குறிப்பு:

கடந்த 30 ஆண்டுகளாக வேத விற்பன்னர்களை வைத்தும் 11 ருந்தர பாரா யணம் படித்தல் மற்றும் ருத்ராபிஷேகம் தீராத நோய் உள்ளவர்களுக்கு எமபயம்போக்கும் ம்ருத்ஞ்சிய ஜெபம் ஜெபித்தல் தமிழகத்தில் உள்ள சில சிவஸ்தலங்களைவிட இங்கு சிறப்பாக நடைபெறுவது இத்தலத்தின் சிறப்பாக கருதப்படுகிறது.

திருவிழாக்கள்;:

ஒவ்வொரு பௌர்ணமி த்திதியில் அம்பாளுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. மற்றும் பிரதோஷ நாட்களில் சிறப்பு அபிஷேகம். மகாசிவராத்திரி , மார்கழிமாதம் நடைபெறும் ஆருத்ரா தரிசனம், 1008 மற்றும் 108 சங்கபிஷேகம் (கார்த்திகை மாதம் சோமவார தினங்களில்) ஆண்டுதோறும் நடராஜருக்கு ஆறுமுறை அபிஷேகம் ஆனித்திருமஞ்சனம் ஆடிப்பூரம் ஸ்ரீ திரிபுர சுந்தரி அம்பாளுக்கு நவராத்திரி 11 நாட்களும் அம்மன் அழைத்தல் உத்தர ந~த்திரம், வளர்பிறை சதுர்த்தி, வளர்பிறை ஷஷ்டி , வளர்பிறை அஷ்டமி மூலா ந~த்திரம் , துர்காஷ்டமி ஸரஸ்வதி பூஜை விஜய தசமி ஊஞ்சல் உற்சவம் விழா விஷேச அலங்காரம் மற்றும் லலிதாஸஹஸ்ரநாமம் காலை மற்றும் மாலை சொல்லப்படும்.

அமைவிடம்: சென்னை கோயம்பேட்டிலிருந்து பாடி செல்லும் வழியில் திருமங்கலத்தில் இறங்கி நடந்து செல்லும் தூரத்தில் கோவில் உள்ளது.

தொடர்புக்கு:

ஆலய நிர்வாகம்

ஸ்ரீதிரிபுர சுந்தரி அம்பிகா ஸமேத ,அருள்மிகு ஸ்ரீ சந்திரமெலிஸ்வரர் ஆலயம்,

அரங்கநாதன் தோட்டம், 15 வது பிரதான சாலை, அண்ணாநகர், சென்னை-40.

தொலைபேசி -044-26162218 மற்றும் 26161030

E.Mail ID: chandratiripura@gmail.com

ப. பரசுராமன் 

அதிகம் படித்தவை

^