10 வாக்குச் சாவடிகளில் மறுவாக்குப் பதிவு

தர்மபுரி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட பாப்பிரெட்டி சட்டமன்றத் தொகுதியில் 4,000 வாக்காளர்களைக் கொண்ட நத்தமேடு பகுதியில் 4 வாக்குச்சாவடிகள் உள்ளன. இந்த பகுதிகளில் தேர்தல் அன்று பிற்பகலில் இருந்தே குறிப்பிட்ட பாமக கட்சியை சேர்ந்த ஏஜெண்டுகள் வாக்களிக்க வருபவர்களிடம் கையில் மை மட்டும் வைத்துவிட்டு, அவர்களின் வாக்குகளை ஏஜெண்டுகள் வாக்களித்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அங்கு சிசிடிவி காமிராவும் இருக்கும் இடத்திலிருந்து திருப்பி விடப்பட்டுள்ளது. மேலும் வாக்குச் சாவடி அலுவலர்களும் மிரட்டப்பட்டுள்ளனர் என்று திமுகவினர் குற்றம் சாட்டினார்கள். இதேபோல ஒரு சில இடங்களில் வாக்குப் பதிவு எந்திரங்களில் கோளாறு ஏற்பட்டதாகவும் எதிர்க்கட்சிகள் புகார் தெரிவித்திருந்தன. இதுபற்றி ஏற்கனவே குறிப்பிட்ட சாஹு, “அதன்படி திருவள்ளூர், கடலூர் தொகுதிகளில் தலா 1 வாக்குச் சாவடி, தருமபுரியில் 8 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப் பதிவு நடத்த வேண்டிய அவசியம் இருக்கிறதா என்று மாவட்ட தேர்தல் அதிகாரிகள், பொதுப் பார்வையாளரிடம் அறிக்கை கேட்டிருக்கிறோம். அறிக்கை கிடைத்தவுடன் அதனை டெல்லிக்கு அனுப்பி வைப்போம். தேர்தல் ஆணையம் இறுதி முடிவெடுக்கும்” என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில் இன்று தர்மபுரி பாப்பிரெட்டிபட்டி உள்ளிட்ட 8 வாக்குச் சாவடிகள், கடலூர், திருவள்ளூர் உள்ளிட்ட 10 வாக்குச் சாவடிகளில் மறுவாக்குப் பதிவு நடத்த இன்று தேர்தல் ஆணையத்துக்கு பரிந்துரை செய்திருக்கிறார் சாஹூ. சட்டமன்ற இடைத்தேர்தல்களில் பாப்பிரெட்டி தொகுதி முடிவு தங்களுக்கு சாதகமாக இருக்குமா என்ற சந்தேகம் திமுகவுக்கு இருந்தது. ஆனால் இப்போது மறுவாக்குப் பதிவுக்கு பரிந்துரை செய்யப்பட்டிருக்கும் நிலையில் அங்கே ஆயிரக்கணக்கான வாக்குகள் இருப்பதால் தங்களுக்கே சாதகமாக இருக்கும் என்று நம்பிக்கையில் இருக்கிறார்கள் திமுகவினர்.

^