மாம்பழம் சின்னம் வரைந்திருந்த வீடுகளில் பெட்ரோல் குண்டு வீச்சு… கடலூர் அருகே பதற்றம்

நெல்லிக்குப்பம் அருகே மாம்பழம் சின்னம் வரைந்திருந்த வீடுகளில் பெட்ரோல் குண்டு வீச்சு நடந்துள்ள சம்பவம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பத்தை அடுத்த எய்தனூரில் மாம்பழம் சின்னம் வரைந்த 2 வீடுகளின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது. பொன்பரப்பி மோதல் எதிரொலியாக இந்த சம்பவம் நடந்ததா? பெட்ரோல் குண்டு வீசியவர்கள் யார் என்று நெல்லிக்குப்பம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடந்த ஏப்ரல் 18ஆம் தேதியன்று அரியலூர் மாவட்டம் செந்துறை வட்டத்தில் உள்ள பொன்பரப்பி கிராமத்தில் ஒரு பிரிவினர் வசிக்கும் பகுதியில் மற்றொரு பிரிவைச் சேர்ந்தவர்கள் நுழைந்து தாக்குதல் நடத்தினர். இதனைத் தொடர்ந்து, இரு வேறு பிரிவினர் நடுவே ஏற்பட்ட மோதலில், பலரது வீடுகள் சேதப்படுத்தப்பட்டன. கலவரம் பரவாமல் தடுக்க போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்திற்கு பல்வேறு தரப்பிலும் கண்டனங்கள் வலுத்துள்ளன. தேர்தல் தினத்தன்று பொன்பரப்பில் நடந்த வன்முறை சம்பவங்கள் தொடர்பாக செந்துறை காவல்துறை 12 பேரைக் கைது செய்துள்ளது. 25க்கும் மேற்பட்டவர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்தநிலையில், நெல்லிக்குப்பத்தை அடுத்த எய்தனூரில் மாம்பழம் சின்னம் வரைந்த 2 வீடுகளின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பதற்றத்தை தணிக்க போலீசார் குவிக்கப்பட்டுள்ளார்.

^