அதிமுக கூட்டணியில் தேர்தல் ஆணையத்துக்கும் 2 சீட் கொடுத்திருக்கலாம்

சென்னை எஸ்.ஐ.இ.டி கல்லூரியில், நடிகரும் திமுக தலைவரின் மகனுமான உதயநிதி ஸ்டாலின் வாக்களித்தார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ``காலை முதல் மக்கள் மிகவும் ஆர்வமுடன் வாக்களித்துவருகின்றனர். வாக்களிக்கச் செல்வதற்காக கோயம்பேட்டில் ஆயிரக்கணக்கான மக்கள் காத்திருந்துள்ளனர். ஆனால், அவர்களுக்குப் பேருந்துகள் கிடைக்கவில்லை. எப்போதும் இதுபோன்ற சம்பவம் நிகழ்ந்ததில்லை. இதை மக்களின் எழுச்சியாகவே நான் கருதுகிறேன். நேர்மறையான முடிவு வரும் என நம்புகிறேன். வாக்கு இயந்திரங்களில் பிரச்னை வருவது மிகவும் சாதாரண விஷயம். அதைத் தக்க முறையில் சரிசெய்து, மீண்டும் அந்தப் பிரச்னை ஏற்படாத வகையில் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்த வாக்குச்சாவடிகளில் வாக்களிக்கும் நேரத்தை அதிகரிக்க வேண்டும். பணப்பட்டுவாடா செய்ததால் வேலூரில் தேர்தல் ரத்துசெய்யப்பட்டுள்ளது என்கிறார்கள். அப்படிப் பார்த்தால் முதலில் தேனியில்தான் தேர்தலை ரத்துசெய்திருக்க வேண்டும். வேலூரில் மக்களவைத் தேர்தலை ரத்துசெய்து இடைத்தேர்தலை மட்டும் நடத்துகிறார்கள். இதில் உள்நோக்கம் உள்ளது. அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 4 சீட்டுகளும், பாமகவுக்கு 7 சீட்டுகளும் அளித்துள்ளனர். அதேபோல, தேர்தல் ஆணையத்துக்கும் 2 சீட் அளித்திருக்கலாம்'’ எனத் தெரிவித்தார்.

^