தர்மபுரி களநிலவரம்

தர்மபுரி மக்களவை தொகுதி என்பது பாலக்கோடு, பென்னாகரம், தர்மபுரி, பாப்பிரெட்டிபட்டி, அரூர், மேட்டூர் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கிய தொகுதியாகும். கடந்த 1998ம் ஆண்டு முதல் நடைப்பெற்ற 5 மக்களவை தேர்தலில் 4 முறை பாமக தான் இங்கு வென்றுள்ளது. கடந்த 2014ம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் பாஜக கூட்டணியில் இருந்த பாமக இந்த தொகுதியில் வென்றது. அன்புமணி ராமதாஸ் இந்த தொகுதியில் சுமார் 4,68,194 வாக்குகள் பெற்றார். இரண்டாம் இடம் பிடித்த அதிமுகவை சேர்ந்த மோகன் சுமார் 3,91,048 வாக்குகள் பெற்றிருந்தார். தற்போது அதிமுக மற்றும் பாமக கூட்டணி வைத்துள்ளதால், தர்மபுரியில் பாமகவுக்கு கூடுதல் ப்ளஸாக அமைந்துள்ளது. இருப்பினும் அதிமுக - அமமுக என அதிமுக வாக்கு வங்கி பிளவுப்பட்டு இருப்பதால், அதிமுக வாக்குகள் அப்படியே பாமகவுக்கு செல்லுமா என்பது சந்தேகம் தான். இந்தமுறை பாமக சார்பில் அன்புமணி ராமதாஸ், திமுக சார்பில் செந்தில், அமமுக சார்பில் பழனியப்பன், மநீம சார்பில் ராஜசேகர் மற்றும் நாம் தமிழர் கட்சி சார்பில் ருக்மணி தேவி ஆகியோர் இந்த தொகுதியில் களமிறங்கி உள்ளனர். இந்த தொகுதியில் தற்போது திமுக, அமமுக மற்றும் பாமகவுக்கு இடையே மும்முனை போட்டி நடந்து வருவதாக சொல்லப்படுகிறது. அண்மையில் இந்த தொகுதியில் அமமுக வேட்பாளர் பழனியப்பன் வெல்வதற்கும் வாய்ப்பு உள்ளதாக சில தகவல்கள் அரசியல் களத்தில் வெளியாகியது. தர்மபுரியில் பாமகவா ? திமுகவா ? என இரு கட்சிகளுக்கு நடுவே போட்டி நிலவி வந்த நிலையில் அமமுகவுக்கும் இந்த தொகுதியில் ஒரு வாய்ப்பு உள்ளது என வெளியான தகவல் அரசியல் களத்தில் உள்ளவர்களை சற்று கவனிக்கவைத்தது. இந்த நிலையில் இந்த தொகுதியில் உள்ள களநிலவரம் குறித்து அறிந்துக்கொள்வதற்கு, தர்மபுரி மாவட்ட அரசியலை உற்று கவனிக்கும் இளம் வழக்கறிஞர் ஒருவரை தொடர்புகொன்டோம். அப்போது அவர் கூறியதாவது :- "தர்மபுரி தொகுதியில் தற்போது மும்முனை போட்டி என்று கூற முடியாது. பாமக வெற்றி பெறுவதற்கு இந்த தொகுதியில் அதிக வாய்ப்பு உள்ளது. சிட்டிங் எம்.பி, அதிமுக கூட்டணி, சமூக ரீதியலான வாக்குகள், தொகுதியில் முகம் தெரியாத திமுக வேட்பாளர் போன்ற காரணங்களால் அன்புமணிக்கு இங்கு சாதகமான சூழல் உள்ளது." "தர்மபுரி தொகுதி என்பது பாமகவின் பெல்ட் தான். கடந்த மக்களவை தேர்தலில் பாமக பாஜக மற்றும் தேமுதிகவுடன் கூட்டணி வைத்தே இந்த தொகுதியில் வென்றது, இவர்களுடன் தற்போது அதிமுகவின் வாக்கு வங்கியும் இணைகிறது. அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு உரிய மரியாதை அளிக்கப்படுவதால் இந்த தொகுதியில் அதிமுகவுக்கு பெரிய எதிர்ப்பு இல்லை. இன்னும் சொல்லப்போனால் தர்மபுரிக்கு அருகில் உள்ள தொகுதி சேலம். அங்கு அதிமுக களம் காண்கிறது. அங்கு ஒரு தேர்தல் பணிக்குழுவுக்கு 5 உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டால், 2 பேர் அதிமுக, 2 பேர் பாமக, 1 நபர் தேமுதிக என நியமிக்கப்படுகிறார்கள், அதுமட்டுமில்லாமல் அங்கு அதிமுக நிர்வாகிகளுக்கு எவ்வளவு பணம் அளிக்கப்படுகிறதோ அதே அளவு தொகை பாமக நிர்வாகிகளுக்கும் வழங்கப்படுகிறது. இதை போன்ற சரிசமமான மரியாதை அதிமுகவினர் பாமக தொண்டர்களுக்கும், நிர்வாகிகளுக்கும் அளிப்பதால் இங்குள்ள மக்களுக்கு அதிமுக மீதுள்ள அதிருப்தி நிலை என்பது தற்போது இல்லை." வேல்முருகன் மற்றும் காடு வெட்டி குருவின் குடும்பத்தின் பிரச்சாரம் மற்றும் அவர்கள் தெரிவித்த குற்றச்சாட்டுகள் குறித்து கேட்டப்போது, "இங்கு அவர்களது பிரச்சாரம் எல்லாம் பெரிதாக எடுபடவில்லை சேலத்தில் கூட வேல்முருகனுக்கு செல்வாக்கு உள்ளது. ஆனால் இங்கு தர்மபுரியில் பெரிதாக எடுபடவில்லை. தேர்தலில் சின்னத்தின் பங்கு எவ்வளவு முக்கியம் என்பது தெரியவேண்டுமென்றால் தர்மபுரி பகுதிக்கு வந்து பார்த்தால் புரியும். என்ன குற்றச்சாட்டுக்கள் வைத்தாலும் அதனை மக்கள் பெரிதாக எடுத்துக்கொள்ள போவதில்லை. இங்கு உதயசூரியன் என்ற சின்னதிற்கு வாக்களிக்க மக்கள் உள்ளனர், அதே போல் தான் பாமகவுக்கும். அதைத்தாண்டி அரசியலை உற்று நோக்கி கவனிக்கும் தேவையும் இந்த தொகுதி மக்களிடம் இல்லை. ஆகையால் இந்த குற்றசாட்டுகளுக்கு பெரிதாக தொகுதிக்குள் எதிர்ப்பு இல்லை." "திமுக சார்பில் களமிறங்கி இருப்பவர் செந்தில் குமார், இவரை தொகுதியில் யாரென்றே தெரியாது. வேட்பாளர் அறிவிக்கும் போது தான், இப்படியொரு நபர் திமுகவில் உள்ளார் என மக்களுக்கே தெரியவந்தது.அதுமட்டுமில்லாமல் செந்தில் குமாரை திமுகவில் உள்ளவர்கள் ஆதரிக்கிறார்களா என்பது கேள்வி குறியாக தான் உள்ளது. திமுக வேட்பாளர் செந்தில் அண்மையில் பென்னாகரம் தொகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அந்த தொகுதி திமுக எம்.எல்.ஏ இன்பசேகரன், சரவணன் பிரச்சாரத்திற்கு கூட வரவில்லை. இதிலே அவர்களுக்குள் அதிருப்தி உள்ளது என்பது தெளிவாக புலப்படுகிறது." "கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சிக்கு தொகுதிக்குள் செல்வாக்கு இல்லை, வைகோவுக்கும் அதே நிலைமை தான், விசிகவுக்கு இங்கு கணிசமான வாக்கு வங்கி உள்ளது. விசிக தொண்டர்கள் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினர் இருக்கும் பகுதிகளுக்கு சென்று வாக்கு சேகரிக்கின்றனர், கொடி கட்டுகின்றனர். அதை தவிர்த்து மற்ற பகுதிகளுக்கு செல்லும்பொழுது கூட்டணி கட்சியினரே அவர்களை வரவேண்டாம் என்று சொல்கின்றனர். இந்த முடிவை விசிகவில் உள்ள சில மூத்த நிர்வாகிகள் ஒத்துகொண்டாலும், அக்கட்சியின் இளைஞர்கள் அதனை பொறுத்துக்கொள்வதில்லை. இதைப்போன்ற நடவடிக்கையால் அவர்கள் மாற்றுகட்சிக்கு வாக்கு அளிக்கவும் வாய்ப்பு உள்ளது." என தெரிவித்தார். "அமமுகவை பொறுத்தவரை தினகரன் தான் இந்த கட்சிக்கு அடையாளம்.ஜெயலலிதா இருக்கும் பொழுது ஜெயலலிதாவை தான் மக்கள் அனைவருக்கும் தெரியும். மற்ற எம்.எல்.ஏ, எம்.பிக்களை மக்களுக்கு தெரியாது. அந்த நிலை தான் இங்குள்ள பழனியப்பனுக்கும், இருப்பினும் அதிமுகவுக்கென தனி வாக்கு வங்கி உள்ளது. அதை வேண்டுமென்றால் பழனியப்பன் பிரிப்பார் மற்றபடி அதிக வாக்குகளை அமமுக பெறுவதற்கு வாய்ப்பில்லை. அதைப்போல் இந்த தொகுதியில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் மக்களின் வாக்குகள் இந்த முறை திமுகவுக்கு தான் செல்லும், அதிமுக தனித்து நிற்கும் வரை அந்த சமூக வாக்குகளை திமுகவிடம் இருந்து பிரித்தது. தற்போது அதிமுக பாமக கூட்டணியில் உள்ளதும், விசிக திமுக கூட்டணியில் இடம்பெற்று இருப்பதால் அந்த சமூகத்தின் மொத்த வாக்குகளும் திமுகவுக்கு தான் செல்லும்" "மொத்தமாக பார்க்கும் பொழுது இந்த தொகுதியில் உள்ள 50 % வாக்குகளை பாமக பெறுவதிற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது என தெரிவித்தார்."

^