ஓடும் ரயிலில் இரண்டரை வயது சிறுவனைக் கடத்த முயற்சி என புகார்

ஆந்திர மாநிலம் நெல்லூரில் ஓடும் ரயிலில் இரண்டரை வயது சிறுவனைக் கடத்த முயன்றவன், தாய் சுதாரித்துக் கொண்டதால் தப்பி ஓடியதாகவும் புகாரளிக்கப்பட்டுள்ளது. ராயப்பேட்டை பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர் பர்கத், கணவர் சையத் ஹுசேன், இரண்டரை வயது மகன் ஹுசேனுடன், நேற்று இரவு ஜெய்ப்பூர் எக்ஸ்பிரஸ் ரயில் மூலமாக சென்னை திரும்பி கொண்டிருந்தனர். நெல்லூர் அருகே வந்து கொண்டிருந்தபோது S11 பெட்டிக்கு வந்த மர்ம நபர் இரண்டரை வயது சிறுவனைக் கடத்த முயன்றார். மகனின் அசைவுகளை உணர்ந்த தாய் பர்கத் விழித்துக்கொண்டு கூச்சலிட்டதை அடுத்து அந்த நபர் ஓடிச்சென்று தலைமறைவாகிவிட்டதாகக் கூறப்படுகிறது. அந்தப் பெட்டியில் பயணித்த பலரும் தேடியும் அந்த நபரின் அடையாளம் காண முடியாத நிலையில், தாய் பர்கத் இன்று காலை சென்னை சென்ட்ரலில் உள்ள ரயில்வே காவல் நிலையத்தில் புகார் அளித்தார். வழக்குப் பதிவு செய்த சென்ட்ரல் ரயில்வே போலீசார் நெல்லூர் ரயில்வே போலீசாருக்கு வழக்கை மாற்றினர்.

^