பெண் வார்டனை புரட்டி எடுத்த தாய்

பொள்ளாச்சியில் பெண்களுக்கு எதிரான பாலியல் கொடூர வழக்கு விஸ்வரூபமெடுத்துள்ள நிலையில் சென்னையை அடுத்த பூந்தமல்லி ஆராதனா பெண்கள் விடுதியில் தங்கி இருக்கும் பெண்களை பப்புக்கு அழைத்துச்சென்று பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாக வார்டன் மீது புகார் எழுந்துள்ளது. மதுரையைச் சேர்ந்த இளம் பெண்ணின் தாயார் ஒருவர் விடுதிக்குள் புகுந்து வார்டனை புரட்டி எடுத்த சம்பவம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு. சென்னை பூந்தமல்லி பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ளது ஆராதனா பெண்கள் தங்கும் விடுதி. இதன் வார்டனாக ஆனந்தி என்பவரும் பாதுகாவலர்கள் என்ற பெயரில் தாமஸ், ஆறுமுகம், கிருஷ்ணா உள்ளிட்டோரும் இருந்து வருவதாக கூறப்படுகிறது. சில மாதங்களுக்கு முன்பு, மதுரையைச் சேர்ந்த பெண் ஒருவர் சென்னை சட்டக் கல்லூரியில் படித்து வரும் தனது மகளை இந்த விடுதியில் தங்குவதற்கு சேர்த்து விட்டுள்ளார். அந்த விடுதியில் உள்ள அழகான பெண்களிடம் பேச்சுக்கொடுத்து மயக்கும் வார்டன் ஆனந்தி, அவர்களிடம் வசதிபடைந்த இளைஞர்களின் நட்பை ஏற்படுத்தி தருவதாக ஆசைவார்த்தை கூறி நட்சத்திர ஓட்டல்களில் உள்ள பப்புகளுக்கும், பார்ட்டிகள் நடக்கின்ற பண்ணை வீடுகளுக்கும் அழைத்து சென்றதாக கூறப்படுகிறது. அங்கு வைத்து வார்டன் ஆனந்தியின் ஆண் நண்பர்கள், அந்த பெண்களுக்கு மதுவை ஊற்றிக்கொடுத்து அவர்களை தங்கள் வலையில் விழவைத்து தங்கள் விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்வது வழக்கம் என்றும் கூறப்படுகிறது. இதில் எந்த பெண்ணை அழைத்து வரவேண்டும் என்பதையும் சம்பந்தப்பட்ட கும்பல் நேரடியாக பெண்கள் தங்கும் விடுதிக்கே சென்று தேர்வு செய்து விட்டு செல்போனில் தகவல் சொல்லும் என்று கூறப்படுகின்றது. அந்தவகையில் அந்த விடுதியில் தங்கி இருந்த மதுரை அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த ஒரு கல்லூரி மாணவியை அந்த கும்பல் தேர்வு செய்து அழைத்து வர வற்புறுத்தி உள்ளது. வார்டன் ஆனந்தியின் நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு கொடுக்காததால், அடித்து துன்புறுத்தியதோடு உடமைகளை கூட எடுக்க அனுமதிக்காமல் அறைக்கு பூட்டு போட்டு தனது மகளை வெளியில் விரட்டி விட்டதாகவும், தான் ஊரில் இருந்து வந்து மகளை அழைத்துக் கொண்டு நியாயம் கேட்க சென்ற போது வார்டனை அடித்து புரட்டி எடுத்ததாகவும் பாதிக்கப்பட்ட மாணவியின் தாய் தெரிவித்தார் இந்த மாணவி மட்டும் அல்ல பல இளம் பெண்களின் வாழ்க்கையை வார்டன் ஆனந்தி சீரழித்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து புகார் அளித்தும் வார்டன் ஆனந்தி, தாமஸ், ஆறுமுகம் உள்ளிட்டோர் மீது எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என்றும், வழக்கறிஞர் இருவர் மிரட்டியதாகவும் பாதிக்கப்பட்ட மாணவி வேதனை தெரிவித்தார் இதற்கிடையே சம்பந்தபட்ட மாணவி தன்னுடன் படிக்கின்ற ஆண் நண்பர்களை அழைத்து வந்து விடுதியில் ரகளை செய்ததால் விடுதியில் இருந்து வெளியேற்றப்பட்டதாக வார்டன் ஆனந்தி புகாரில் தெரிவித்துள்ளார். மேலும் பெண்கள் விடுதிக்குள் புகுந்து வார்டனை தாக்கியதாக மாணவி மற்றும் மாணவியின் தாய் மீது பூந்தமல்லி காவல்துறையினர் வழக்கு பதிந்துள்ளனர் . பொள்ளாச்சியில் முகநூல் நட்பால் நிகழ்ந்த பாலியல் கொடுமைகள் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ள நிலையில், பூந்தமல்லி பெண்கள் தங்கும் விடுதியில் உள்ள மாணவிகளுக்கு நேர்ந்த கொடுமை குறித்து விரிவான விசாரணை நடத்தி தவறிழைத்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு..

^