இந்திக்கு போகிறார் கீர்த்தி சுரேஷ்

தென்னிந்திய நடிகைகள் அசின், பிரியாமணி, ரம்பா, எமி ஜாக்ஸன், டாப்ஸி, ராய் லட்சுமி உள்ளிட்ட பல நடிகைகள் இந்தி படங்களில் நடிக்கச் சென்றனர். இவர்களில் அசின் மும்பையிலேயே தொழில் அதிபரை திருமணம் செய்துகொண்டு செட்டிலாகிவிட்டார். எமி ஜாக்ஸனும் பட வாய்ப்பில்லாமல் திருமணத்தக்கு தயாராகிவிட்டார். மற்ற நடிகைகள் போதிய வாய்ப்பில்லாமல் திரும்பிவிட்டனர். டாப்ஸி மட்டும் தாக்குபிடித்து கொண்டிருக்கிறார். ஏற்கனவே இந்தியில் நடித்த தமன்னா, காஜல் அகர்வால் போன்றவர்கள் அங்குள்ள போட்டியை தாக்குபிடிக்க முடியாமல் திணறிக்கொண்டிருக்கின்றனர். இவர்களை தொடர்ந்து தற்போது கீர்த்தி சுரேஷுக்கு இந்தியில் நடிக்க அழைப்பு வந்துள்ளது. இந்தியில் தேசிய விருது பெற்ற படம் இக்பால். நஸ்ருதீன் ஷா நடித்த இப்படத்தை சுபாஷ் கய் தயாரிக்க நாகேஷ் குக்கூனூர் இயக்கினார். தற்போது இந்தி, தமிழ், தெலுங்கு 3 மொழிகளில் புதிய படம் இயக்கவிருக்கிறார். இப்படத்தில் ஹீரோயினாக நடிக்க கீர்த்தி சுரேஷிடம் பேசி வருகிறார். எல்லாம் சுமூகமாக முடியும் பட்சத்தில் வரும் மே மாதம் முதல் இதன் படப்பிடிப்பு தொடங்க திட்டமிடப்பட்டிருக்கிறது. பாலிவுட்டில் ஹீரோயின்களுக்கு இடையேயான போட்டியை தாக்குபிடித்து இந்தியில் தனக்கென ஒரு இடத்தை கீர்த்தி தக்க வைப்பாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

^