பாதியில் வெளியேறிய டிரம்ப்: ஹனோயில் நடந்தது என்ன

இந்தியாவில் துல்லிய தாக்குதல், பாகிஸ்தானின் எதிர் தாக்குதல், அபிநந்தன் சிறைபிடிப்பு என போர் மேகம் சூழ்ந்ததை மட்டுமே உலகம் உற்றுக்கவனித்துக்கொண்டிருந்தபோது, இரு முக்கிய தலைவர்களின் சந்திப்பு தோல்வியில் முடிந்தது பெரியஅளவில் பேசப்படாமல் போனது. அமெரிக்க அதிபர் டிரம்பும், வடகொரிய அதிபர் கிம்ஜாங் உன்னும் வியட்நாம் தலைநகர் ஹனோயில் கடந்த 27, 28 தேதிகளில் சந்தித்தனர். எந்த உடன்பாடும் இன்றி அந்த சந்திப்பு பாதியில் முடிந்தது. டிரம்பின் எந்த கோரிக்கையையும் ஏற்கும் மனநிலையில் கிம் இல்லாததால் பேச்சுவார்த்தை முறிந்ததாக ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த பிரச்னை குறித்து சற்று பின்னோக்கி பார்ப்போம். 2016ல் டிரம்ப் அதிபராக பதவியேற்றபோது வடகொரியா முக்கிய பகையாளியாக மாறியது. வாஷிங்டன்னை நோக்கி ஏவுகணையை நிறுத்தி, என் மேஜையில் உள்ள பட்டனை அழுத்தினால் அமெரிக்கா அழிந்துவிடும் என சவால் விட்டார் கிம். அதற்கு, என்மேஜையில் உள்ள பட்டனை அழுத்தினால் வடகொரியா என ஒரு நாடு இருந்த தடமே தெரியாமல் போகும் என டிரம்ப் பதிலடி கொடுக்க இரு நாடுகளுக்கும் இடையே குழாயடி சண்டை மூண்டது. ஏற்கனவே வடகொரியாவும், தென் கொரியாவும் இந்தியா-பாகிஸ்தான் போன்று பங்காளி பகையாளிகள். இந்நிலையில் தென்கொரியாவில் நடந்த குளிர்கால ஒலிம்பிக் போட்டிக்கு சம்பிரதாயமாக ஒரு அழைப்பை அதிபர் மூன்ஜேஇன் அனுப்பினார். அதற்கு தனது சகோதரி கிம்ஜோயாங்கை அனுப்பவதாக வடகொரிய அதிபர் பதிலளிக்க கொரிய தீபகற்பமே மகிழ்ச்சியில் ஆழ்ந்தது.அதன்பின் மடமடவென சம்பவங்கள் நடந்தன. சியோல் வந்த கிம்ஜோயாங், தனது சகோதரர் அமெரிக்க அதிபரை சந்திக்க விரும்புவதாக கூறினார். அமெரிக்காவும் ஏற்றுக்கொள்ள அதற்கான ஏற்பாடுகளை மூன்ஜேஇன் மேற்கொண்டார்.அதன்பின் டிரம்ப்பும், கிம்மும் சிங்கப்பூரில் சந்தித்து பேசினர். கூட்டறிக்கை எதுவும் வெளியிடப்படவில்லை. கூட்டத்திற்குப்பின் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் அணு ஆயுதங்களை கைவிட வடகொரியா ஒப்புக்கொண்டுள்ளதாக டிரம்ப் கூறினார் ஆனால் அருகில் இருந்த கிம் எதுவும் கூறவில்லை. அப்போதே அது சர்ச்சையானது. கிம் ஏமாற்றுகிறார் என அமெரிக்க ஊடகங்கள் பகிரங்கமாக குற்றம்சாட்டின. வடகொரியாவின் யாங்பியான் நகரில் உள்ள அணு ஆயுத மையம், ஆயுத சோதனையின் போது அழிந்துவிட்டது. இதனால் தான் அமைதி பேச்சுக்கு கிம் வந்தார் என செயற்கைக்கோள் படங்களுடன் செய்திகளை வெளியிட்டன. ஆனால் அதை வடகொரிய தொடர்ந்து மறுத்து வந்தது.சிங்கப்பூர் பேச்சுவார்த்தைக்குப்பிறகு யாங்பியானில் மீண்டும் பணிகள் நடப்பதாகவும், அடுத்த அணு ஆயுத சோதனைக்க வடகொரியா தயாராகி வருவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. வழக்கம்போல் இதையும் வடகொரியா மறுத்தது.இந்நிலையில் தான் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தைக்கு இரு தலைவர்களும் தயாராகினர். இம்முறை வியட்நாம் தலைநகர் ஹனோய் பேச்சுவார்த்தைக்கு தேர்வு செய்யப்பட்டது.கடந்த 27, 28 தேதிகளில் பேச்சுவார்த்தை நடந்தது.முதல்நாளில் இரு தலைவர்களும் உற்சாகமாக போட்டோவிற்கு போஸ் கொடுத்தனர். மறுநாள் பேச்சுவார்த்தை நடந்தது. என்ன பிரச்னை பேச்சுவார்த்தையின் முக்கிய நோக்கமாக இருந்தது அணு ஆயுத ஒழிப்பு. வடகொரியா தன் வசம் உள்ள அனைத்து அணு ஆயுதங்களையும் குறிப்பிட்ட காலத்திற்குள் அழித்து விட வேண்டும் என்பதில் டிரம்ப் உறுதியாக இருந்தார். யாங்பியானில் உள்ள அணு ஆயுத செறிவூட்டும் மையத்தை மூட வேண்டும், புளூட்டோனியத்தை முழுவதும் அழிக்க வேண்டும் என்பவை அமெரிக்க அஜெண்டாவில் முக்கிய அம்சங்கள். ஆனால் கிம் தரப்பு அதை ஏற்கவில்லை. வடகொரியா மீதான அனைத்து தடைகளையும் விலக்கிக்கொள்ளாதவரை அணு ஆயுத சோதனையை நிறுத்தி வைப்பது சாத்தியமில்லாதது என திட்டவட்டமாக கூறியது.அணு ஆயுத சோதனையை நிறுத்துவதால் ஏற்படும் இழப்புகளுக்கு நிதியுதவி அளிக்க வேண்டும் என்பதும் கிம் தரப்பின் முக்கிய கோரிக்கையாக இருந்தது.இரு தரப்பும் உறுதியாக இருந்ததால் முடக்கம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த டிரம்ப் கூட்ட அறையில் இருந்து வெளியேறினார்.சில மணி நேரத்திற்குப்பின் வாஷிங்டன் புறப்பட்ட டிரம்ப், பேச்சுவார்த்தை சுமுகமாக இருந்தது. நல்ல முன்னேற்றம் உள்ளது, மீண்டும் கூடிப்பேசும் திட்டம் இல்லை', என்று கூறிவிட்டு பறந்தார். அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் மைக் பாம்பியோ கூறும்போது, 'இரு தரப்பு அதிகாரிகளும் விரைவில் மீண்டும் கூடி பேசுவோம். கூட்டறிக்கை வெளியிடும் திட்டமில்லை' என்றார்.யாங்பியானில் உள்ள அணு ஆயுத சோதனை மையத்தை மூட கிம் ஒப்புக்கொண்டதாகவும் ஆனால் பிற மையங்களில் நடக்கும் ஆய்வுகளை நிறுத்த மறுத்தார் என்றும் கூறப்படுகிறது. தர்ம சங்கடத்தில் தென்கொரியா டிரம்ப்-கிம் முதல் சந்திப்புக்கு ஏற்பாடு செய்தது தென்கொரியா. 2ம் பேச்சுவார்த்தை முறிந்தபின் அதிபர் மூன்ஜேஇன் வெளியிட்ட அறிக்கை: ஹனோய் பேச்சுவார்த்தைக்குப்பின் டிரம்புடன் 30 நிமிடங்கள் தொலைபேசியில் பேசினேன். இரு நாடுகளும் பிரச்னைகளை பேசி தீர்வு உடன்படிக்கைக்கு வரும் என தான் நம்புவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். விருந்தும் ரத்து ஹனோயில் பேச்சுவார்த்தை முடிந்தபின் பெரும் விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்காக வடகொரிய தலைநகர் பியாங்யாங்கில் இருந்து சமையல் கலைஞர்கள் வந்திருந்தனர். ஆனால் பேச்சுவார்த்தையில் உருப்படியான முன்னேற்றம் இல்லாததால் பாதியில் டிரம்ப் வெளியேறினார். விருந்தும் ரத்து செய்யப்பட்டது. சீனாவின் ஆணை அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் வர்த்தக யுத்தம் நடந்து வருகிறது. அடுத்தடுத்து பேச்சுவார்த்தைகள் நடந்தும் தீர்வு கிடைக்கவில்லை. அமெரிக்காவின் கூடுதல் வரி விதிப்பு அமல் தள்ளி வைக்கப்பட்டு வருகிறதே தவிர ரத்து செய்யப்படவில்லை.வடகொரியாவின் அணு ஆயுத சோதனைகளுக்கு முழு அளவில் சீனா உதவி வருகிறது. ஒவ்வொரு முறை டிரம்ப் சந்திப்பிற்கு முன்னதாக சீனா செல்வதை கிம் வழக்கமாக வைத்துள்ளார். இம்முறையும் ஜன., 10ல் பீஜிங் சென்ற கிம் அங்கு அதிபர் ஜீஜின்பிங்கை சந்தித்து பேசினார். டிரம்புடனான பேச்சுவார்த்தை அஜெண்டா அங்கு தான் முடிவு செய்யப்பட்டுள்ளது

^