கேப்டன் வில்லியம்சன் 200* நியூசிலாந்து 715/6 டிக்ளேர்

வங்கதேச அணியுடனான முதல் டெஸ்டில், நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 6 விக்கெட் இழப்புக்கு 715 ரன் குவித்து டிக்ளேர் செய்தது.செடான் பார்க் மைதானத்தில் நடந்து வரும் இப்போட்டியில், டாசில் வென்ற நியூசிலாந்து முதலில் பந்துவீச... வங்கதேசம் முதல் இன்னிங்சில் 234 ரன் எடுத்து ஆல் அவுட்டானது. தொடக்க வீரர் தமிம் இக்பால் அதிகபட்சமாக 126 ரன் விளாசினார். இதைத் தொடர்ந்து, முதல் இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து 2ம் நாள் ஆட்ட முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 451 ரன் குவித்திருந்தது. ஜீத் ராவல் 132, லாதம் 161 ரன், நிகோல்ஸ் 53 ரன் விளாசி ஆட்டமிழந்தனர். கேப்டன் கேன் வில்லியம்சன் 93 ரன், வேக்னர் 1 ரன்னுடன் நேற்று 3வது நாள் ஆட்டத்தை தொடங்கினர். வேக்னர் 47, வாட்லிங் 31 ரன் எடுத்து பெவிலியன் திரும்பினர். நியூசிலாந்து 6 விக்கெட் இழப்புக்கு 715 ரன் குவித்து முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்தது. கேன் வில்லியம்சன் 200 ரன் (257 பந்து, 19 பவுண்டரி), கிராண்ட்ஹோம் 76 ரன்னுடன் (53 பந்து, 4 பவுண்டரி, 5 சிக்சர்) ஆட்டமிழக்காமல் இருந்தனர்.இதைத் தொடர்ந்து, 481 ரன் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை தொடங்கிய வங்கதேசம் 3ம் நாள் ஆட்ட முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 174 ரன் எடுத்துள்ளது. தமிம் இக்பால் 74, ஷத்மன் இஸ்லாம் 37, மோமினுல் ஹக் 8, முகமமது மிதுன் (0) விக்கெட்டை பறிகொடுத்தனர். சவும்யா சர்க்கார் 39, கேப்டன் மகமதுல்லா 15 ரன்னுடன் களத்தில் உள்ளனர். கை வசம் 6 விக்கெட் இருக்க, வங்கதேசம் இன்னும் 307 ரன் பின்தங்கியுள்ள நிலையில் இன்று 4ம் நாள் ஆட்டம் நடைபெறுகிறது.

^