இந்திய அணி அசத்தல் வெற்றி: ஜாதவ், தோனி அரைசதம்

ஒருநாள் தொடரை இந்திய அணி வெற்றியுடன் துவக்கியது. ஐதராபாத்தில் நடந்த முதல் போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. கேதர் ஜாதவ், தோனி அரைசதம் கடந்து கைகொடுத்தனர். ஆஸ்திரேலியாவுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி, ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி ஐதராபாத்தில் நடந்தது. தனது 100வது போட்டியில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி கேப்டன் பின்ச், ‘டாஸ்’ வென்று பேட்டிங் தேர்வு செய்தார். இந்திய அணியில் முகமது ஷமி, ரவிந்திர ஜடேஜா, விஜய் ஷங்கர், குல்தீப் யாதவ் சேர்க்கப்பட்டனர். அம்பதி ராயுடு, கேதர் ஜாதவ் அணிக்கு திரும்பினர். ஆஸ்திரேலிய அணியில் டர்னர் அறிமுகம் ஆனார். பின்ச் ‘டக்’ ஆஸ்திரேலிய அணிக்கு பின்ச், கவாஜா ஜோடி துவக்கம் கொடுத்தது. முதல் ஓவரை ஷமி ‘மெய்டனாக’ வீசினார். அடுத்து வந்த பும்ரா, 3வது பந்தில் பின்ச்சை ‘டக்’ அவுட்டாக்கினார். கவாஜா, ஸ்டாய்னிஸ் இணைந்து சீராக ரன் சேர்த்தனர். கேதர் ஜாதவ் ‘சுழலில்’ ஸ்டாய்னிஸ் (37) அவுட்டானார். ஷமி ‘இரண்டு’ மறுபக்கம் அரைசதம் அடித்த கவாஜா (50), விஜய் ஷங்கரின் அசத்தல் ‘கேட்ச்’ காரணமாக திரும்பினார். ஹேண்ட்ஸ்கோம்ப் (19) நீடிக்கவில்லை. டர்னர் (21), மேக்ஸ்வெல் (40) இருவரும் முகமது ஷமி ‘வேகத்தில்’ போல்டாகினர். கூல்டர் நைல் 28 ரன் எடுக்க, ஆஸ்திரேலிய அணி 50 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 236 ரன்கள் எடுத்தது. அலெக்ஸ் கேரி (36) அவுட்டாகாமல் இருந்தார். இந்தியா சார்பில் முகமது ஷமி, பும்ரா, குல்தீப் தலா 2 விக்கெட் சாய்த்தனர். தவான் ‘0’ எட்டக்கூடிய இலக்கை விரட்டிய இந்திய அணிக்கு துவக்கத்திலேயே ‘டக்’ அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார் தவான். பின் இணைந்த ரோகித், கேப்டன் விராத் கோஹ்லி ஜோடி நிதானமாக ரன் சேர்த்தது. கூல்டர்–நைல் வீசிய 6வது ஓவரில் 2 பவுண்டரி அடித்த கோஹ்லி, கம்மின்ஸ் பந்தில் ஒரு சிக்சர் விளாசினார். இரண்டாவது விக்கெட்டுக்கு 76 ரன் சேர்த்திருந்த போது ஆடம் ஜாம்பா ‘சுழலில்’ கோஹ்லி (44) சிக்கினார். கூல்டர்–நைல் ‘வேகத்தில்’ ரோகித் (37) வெளியேறினார். ஜாதவ் அபாரம் அடுத்து வந்த அம்பதி ராயுடு (13), ஜாம்பாவிடம் சரணடைந்தார். பின் கேதர் ஜாதவ், தோனி ஜோடி இணைந்து போராடியது. கூல்டர்–நைல் வீசிய 38வது ஓவரில் ஒரு சிக்சர், ஒரு பவுண்டரி அடித்தார் தோனி. மறுமுனையில் இவருக்கு தோள் கொடுத்த ஜாதவ், ஒருநாள் அரங்கில் தனது 5வது அரைசதத்தை பதிவு செய்தார். பொறுப்பாக ஆடிய தோனி, தன்பங்கிற்கு அரைசதமடித்தார். ஸ்டாய்னிஸ் பந்தில் தொடர்ச்சியாக 2 பவுண்டரி விரட்டிய இவர், வெற்றியை உறுதி செய்தார். இந்திய அணி 48.2 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 240 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. தோனி (59), ஜாதவ் (81) அவுட்டாகாமல் இருந்தனர். ஆஸ்திரேலியா சார்பில் கூல்டர்–நைல், ஜாம்பா தலா 2 விக்கெட் கைப்பற்றினர். தொடரில் இந்திய அணி 1–0 என, முன்னிலை பெற்றது. இரண்டாவது போட்டி வரும் 5ல் நாக்பூரில் நடக்கவுள்ளது. 216 சிக்சர் ஆஸ்திரேலியாவின் கூல்டர்–நைல் பந்தை சிக்சருக்கு அனுப்பிய தோனி, சர்வதேச ஒருநாள் போட்டி அரங்கில் இந்தியாவுக்காக அதிக சிக்சர் விளாசிய வீரர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்தார். இவர், 336 போட்டியில் 216 சிக்சர் அடித்துள்ளார். அடுத்து மூன்று இடங்களில் முறையே ரோகித் சர்மா (215 சிக்சர்), சச்சின் (195), கங்குலி (189) ஆகியோர் உள்ளனர். 28.1 ஓவர் இந்திய பவுலர்கள் வீசிய 169 பந்தில் (‘டாட் பால்’) ஒரு ரன் கூடு எடுக்கப்படவில்லை. இது, 28.1 ஓவருக்கு சமம். அதிகபட்சமாக முகமது ஷமி 38, பும்ரா 35, ரவிந்திர ஜடேஜா 34 ‘டாட் பால்’ வீசினர். 141 ரன்கள் இந்திய அணி, ஒருகட்டத்தில் 99 ரன்னுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து திணறியது. இந்நிலையில் இணைந்த கேதர் ஜாதவ், தோனி ஜோடிஆஸ்திரேலிய பந்துவீச்சை எளிதாக சமாளித்து வெற்றிக்கு வித்திட்டனர். ஐந்தாவது விக்கெட்டுக்கு 141 ரன் சேர்த்த இவர்களை பிரிக்க முடியாமல் ஆஸ்திரேலிய பவுலர்கள் தடுமாறினர். தோனி ‘598’ டெஸ்ட் (166), ஒருநாள் (334), ‘டுவென்டி–20’ (98) என மூன்று வித கிரிக்கெட்டிலும் சேர்த்து அதிக முறை விக்கெட் கீப்பராக களமிறங்கிய வீரர்களில் தோனி முதலிடத்தில் தொடர்கிறார். நேற்று இவர் 598வது போட்டிகளில் கீப்பிங் செய்தார். அடுத்த இடங்களில் பவுச்சர் (596, தெ.ஆப்.,), சங்ககரா (499, இலங்கை), கில்கிறிஸ்ட் (485, ஆஸி.,) உள்ளனர். மூன்றாவது வீரர் ஆஸ்திரேலிய அணிக்காக 100வது ஒருநாள் போட்டியில் களமிறங்கி ‘டக்’ அவுட்டான மூன்றாவது வீரர் ஆனார் பின்ச். இதற்கு முன் டீன் ஜோன்ஸ், மெக்டெர்மட் இதுபோல அவுட்டாகினர். 8 இன்னிங்சில் 45 ரன் இந்தியாவுக்கு எதிராக பின்ச் (ஆஸி.,) மோசமான ‘பார்ம்’ தொடர்கிறது. மெல்போர்ன் டெஸ்டில் 8, 3 ரன் எடுத்த இவர், ஒருநாள் தொடரில் 6, 6, 14 என ஏமாற்றினார். தற்போது ‘டுவென்டி–20’ தொடரில் 0, 8 என சொதப்பிய பின்ச், நேற்று ‘டக்’ அவுட்டானார். கடைசி 8 இன்னிங்சில் 45 ரன்கள் தான் எடுத்தார். 4 அரைசதம் இந்த ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தொடர்ச்சியாக விளையாடிய 4 ஒருநாள் போட்டியிலும் இந்திய வீரர் தோனி அரைசதம் கடந்தார். சிட்னி போட்டியில் 51 ரன் எடுத்த இவர், அடிலெய்டில் 55* ரன் விளாசினார். பின் மெல்போர்னில் 87* ரன் குவித்த இவர், ஐதராபாத் போட்டியில் 59* ரன் எடுத்தார். 48 வெற்றி முதல் 64 ஒருநாள் போட்டிகளில் அதிக வெற்றி தேடித்தந்த கேப்டன்கள் பட்டியலில் இந்தியாவின் கோஹ்லி, வெஸ்ட் இண்டீசின் விவியன் ரிச்சர்ட்சை (47 வெற்றி) முந்தி 3வது இடம் பிடித்தார். இதுவரை கோஹ்லி, 48 வெற்றி தேடித்தந்துள்ளார். முதலிரண்டு இடங்களில் ஆஸ்திரேலியாவின் பாண்டிங் (51 வெற்றி), வெஸ்ட் இண்டீசின் கிளைவ் லாய்டு (50) உள்ளனர்.

^