தம்பிதுரையா, சின்னத்தம்பியா?

தமிழகம், புதுச்சேரியிலுள்ள 40 தொகுதிகளிலும் அதிமுக சார்பில் போட்டியிடுவதற்கான விருப்ப மனு விநியோகத்தைக் கடந்த 4ஆம் தேதி அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தனர். கடந்த 10ஆம் தேதியுடன் அவகாசம் முடிந்த நிலையில், மேலும் நான்கு நாட்களுக்கும் அவகாசம் நீட்டிக்கப்பட்டது. அவகாசம் நேற்றுடன் (பிப்ரவரி 14) முடிந்த நிலையில், மொத்தமாக 1,737 பேர் விருப்ப மனுத் தாக்கல் செய்துள்ளனர். இதில் அமைச்சர்களின் வாரிசுகள் பலரும் விருப்ப மனு வாங்கியுள்ளனர்.விருப்ப மனுத் தாக்கல் தொடங்கிய அன்றே தேனி தொகுதியில் போட்டியிடுவதற்காக விருப்ப மனுவைப் பெற்றுச் சென்றார் பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத். இதுபோலவே தென்சென்னையில் மீண்டும் போட்டியிடுவதற்காக ஜெயக்குமார் மகன் ஜெயவர்தனும், அமைச்சர் எம்.சி.சம்பத் மகன் பிரவின், முன்னாள் அமைச்சர் வளர்மதியின் மகன் உள்ளிட்டோரும் விருப்ப மனுக்கள் தாக்கல் செய்துள்ளனர். இதுதவிர முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் மகன் மிதுன் போட்டியிடவும் சிலர் விருப்ப மனு அளித்துள்ளனராம்.விருப்ப மனுத் தாக்கல் செய்வதற்குக் கடைசி தினமான நேற்று திடீர் திருப்பமாக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் தந்தை சின்னத்தம்பி கரூர் தொகுதியில் போட்டியிடுவதற்கு மனு செய்துள்ளார். கரூர் தொகுதியில் அதிமுக மூத்த தலைவர் தம்பிதுரை தொடர்ந்து போட்டியிட்டுவரும் நிலையில், அமைச்சரின் தந்தை விருப்ப மனுத் தாக்கல் செய்துள்ளது பரபரப்பாகப் பேசப்பட்டது. இதுதொடர்பான கேள்விக்குப் பதிலளித்த தம்பிதுரை, “ஜனநாயக நாட்டில் அரசியலில் யார் வேண்டுமானாலும் ஈடுபடலாம்” என்றார்

^