மத்தியில் காமராஜர் ஆட்சி தான் நடக்கிறது.. பிரதமர் மோடி

பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு மூலம், ஏற்கெனவே உள்ள இட ஒதுக்கீடு எள்ளளவும் பாதிக்கப்படாது என பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார். காமராஜர் விரும்பிய ஊழலற்ற ஆட்சி மத்தியில் நடப்பதாகவும் திருப்பூர் பொதுக் கூட்டத்தில் உரையாற்றினார். திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூரில் பாஜக பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று உரையாற்றினார். அப்போது திருப்பூரில் உற்பத்தியான பின்னலாடைகளும், கொப்பரைத் தேங்காய்க்கு குறைந்த பட்ச ஆதார விலையை உயர்த்தியமைக்காக தென்னை விவசாயிகள் சார்பில் வெள்ளித் தேங்காய் பரிசளிக்கப்பட்டது. வணக்கம் என தமிழில் தமது உரையைத் தொடங்கிய மோடி, திருப்பூர் குமரன், தீரன் சின்னமலை உள்ளிட்டோரின் வீர தீரங்களை நினைவு கூர்ந்தார். கடந்த சில வாரங்களாக மக்கள் பயன்படுத்தும் NaMo Again என்ற டி சர்ட் திருப்பூரில் உற்பத்தி செய்யப்பட்டது தான் என குறிப்பிட்டார். திருச்சி விமான நிலையத்தில் குறைந்த பட்சமாக 500 பேர் மட்டுமே பயணிக்க முடியும் என்ற நிலை உள்ளதால், நவீனமயமாக்கப்பட்டு விரிவாக்கம் செய்யப்படும் கட்டிடம் மூலம் ஒரே நேரத்தில் 3 ஆயிரம் பேர் வரை பயணிக்கலாம் என்றார். மேம்படுத்தப்பட்ட வசதிகளுடன் திருப்பூரில் ESI மருத்துவமனை திறக்கப்படவுள்ளதாக மோடி குறிப்பிட்டார். முந்தைய அரசாங்கம் புரோக்கர்களை அமைத்து ஊழல் செய்து வந்ததாகக் கூறிய அவர், காமராஜர் விரும்பிய ஊழலற்ற ஆட்சி மத்தியில் நடந்து கொண்டிருப்பதாக குறிப்பிட்டார். இந்திய ராணுவம், ராணுவப் புரட்சி செய்ய முயற்சிப்பதாக காங்கிரஸ் கட்சியினர் கட்டுக் கதை கட்டியதாகவும் பிரதமர் குற்றம்சாட்டினார். இந்திய ராணுவம் ஒரு போதும் அப்படி செய்யாது எனவும் அவர் குறிப்பிட்டார். ஏழை, நடுத்தர மக்களுக்கு 1 கோடியே 30 லட்சம் பேருக்கு வீடுகள் கட்டித் தரப்பட்டுள்ளதைக் குறிப்பிட்ட அவர் வீடு என்பது சுவர் மட்டுமல்ல, நமது மரியாதையும் தான் என்றார். வருமான வரி விலக்கு வரம்பு இரண்டரை லட்சம் ரூபாயிலிருந்து 5 லட்சம் ரூபாயாக உயர்ந்தப்பட்டிருப்பதால் நடுத்தர மக்களில் வாழ்வாதாரம் மேம்படும் என அவர் தெரிவித்தார். நடுத்தர மக்களின் மீது அக்கறை இல்லாததால் தான் முந்தைய ஆட்சியை மக்கள் வீட்டுக்கு அனுப்பியதாகக் கூறிய மோடி, வாக்கு மறு எண்ணிக்கை அமைச்சர் என ப.சிதம்பரத்தையும் மறைமுகமாக விமர்சித்தார். உலகில் உள்ள அனைத்து அறிவும் தமது மூளையில்தான் இருப்பதாகக் கருதும் தமிழகத்தில் இருந்து வந்த ஒரு முன்னாள் அமைச்சர், நடுத்தர மக்களை விலை உயர்ந்த ஐஸ் கிரீம், வாட்டர் பாட்டில் வாங்கிப் பயன்படுத்துகிறார்கள் எனக் கேலி பேசியதாக மோடி குறிப்பிட்டார். எதிர்க்கட்சியினரிடம் விவசாயம், சிறு, குறு தொழில் என எந்த கேள்வி கேட்டாலும், மோடி, மோடி என்று தம்மை வசைபாடுவதையே பதிலாகக் கூறுவார்கள் என நகைச்சுவையாகக் கூறினார். அதிகார வர்க்கத்தை இடைத்தரகர்கள் சுற்றி வந்திருந்த காலம் தற்போது அல்ல எனவும் குறிப்பிட்டார். ஐஸ் கிரீம், ரீசார்ஜ் உள்ளிட்டவற்றைப் போல், ஜாமீனை ஒரு குடும்பம் ஃபேமிலி பேக்கேஜாக வாங்கியதாக பிரதமர் தமது உரையில் விமர்சித்தார். மருந்துக் கலப்படத்தைப் போல உள்ள, மகா கூட்டணியை மக்கள் ஏற்க மாட்டார்கள் என கூறினார். மத்திய அரசு அறிவித்துள்ள விவசாயிகள் நலனுக்கான புதிய திட்டத்தில் 10 ஆண்டுகளில் 7 கோடியே 50 லட்சம் பணம் விவசாயிகளின் வங்கிக் கணக்குகளுக்கு செல்லும் என மோடி உறுதியளித்தார். பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப் பிரிவினருக்கு 10% இட ஒதுக்கீடு கொண்டுவரப்பட்டிருப்பதால், ஏற்கெனவே உள்ள பட்டியல் சமுதாய, மலைவாழ், இதர பிற்படுத்தப்பட்ட சமுதாய மக்களின் இட ஒதுக்கீடு எள்ளளவும் பாதிக்கப்படாது என மோடி தமது உரையில் தெரிவித்தார். கடல் முதல் வானம் வரை பல்வேறு ஊழல்களை காங்கிரஸ் செய்துள்ளதாகக் கூறிய மோடி, இன்று ஊழலோடு தொடர்புடையதாக கைது செய்யப்படும் ஒவ்வொருவரும் யாரோ ஒரு தலைவரோடு தொடர்புள்ளவர்களாக இருப்பதாகக் கூறினார். மகா கூட்டணியின் துப்பாக்கிகள் அனைத்தும் தம்மைக் குறிவைத்தே இருப்பதாகவும், மக்களின் நலன் அவர்களின் குறியாக இல்லை எனவும் விமர்சித்தார்.

^