ரூ.15,000 சில்லறைக்கு பதில் உப்பு பாக்கெட்....வங்கியில் இருந்து பேசுவதாக கூறி மளிகை கடைக்காரரிடம் மோசடி..!!

வேடசந்தூர் கரூர் சாலையில் செந்தில் என்பவருக்கு சொந்தமான மளிகை கடை உள்ளது. இந்தக் கடையானது இப்பகுதியில் பழமையான மளிகை கடை ஆகும். இங்கு நாள் தோறும் ஆயிரக்கணக்கில் வாடிக்கையாளர்கள் வருவது வழக்கம். சில்லறையாகவும் மொத்தமாகவும் விற்பனை செய்துவரும் மளிகை கடைக்கு தொலைபேசியில் அழைப்பு வந்துள்ளது. வேடசந்தூர் குங்கும காளியம்மன் கோவில் தெருவில் உள்ள இந்தியன் வங்கியில் இருந்து அழைக்கிறோம், 15,000 ரூபாய்க்கு சில்லறை நாணயங்கள் உள்ளது பெற்றுக்கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார்கள். கடை உரிமையாளர் அழைப்பை துண்டித்து விட்டு, இங்கு பணி செய்து வரும் பெரியசாமி என்பவரையும் மற்றுமொரு தொழிலாளியையும் இருசக்கர வாகனத்தில் அனுப்பி வைத்துள்ளார். சம்பந்தப்பட்ட வங்கி அருகே வந்த போது வங்கி ஊழியர் போல் நாடகமாடிய நபர் மற்றோரிடத்தில் சில்லறை நாணயங்கள் உள்ளது என பெரியசாமி என்ற தொழிலாளி அழைத்துச் சென்று ஆத்துமேடு முத்தூட் பின்கார்ப் அருகே கீழ் தளத்தில் மர்ம நபர் வைத்திருந்த மூட்டையை எடுத்து பெரியசாமியின் வாகனத்தில் வைத்துவிட்டு ரூபாய் பதினைந்து ஆயிரத்தை பெற்றுக் கொண்டார். நாணயங்களை வாங்கிக் கொண்டது போல் நம்பி மளிகை கடைக்கு சென்று பொட்டலத்தை பிரித்து பார்க்கையில் பத்துக்கும் மேற்பட்ட உப்பும் பாக்கெட்டுகளை உள்ளே வைத்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். ஏமார்ந்து விட்டோம் என அலறி அடித்து ஓடி வந்து பார்க்கையில் மர்ம நபர் தப்பிச் சென்றுள்ளார். மேலும் இந்த நூதன கொள்ளை குறித்து மர்ம நபர் யார் என்பதை கண்டறிய இந்தியன் வங்கி மற்றும் முத்தூட் பின்கார்ப் என்ற நிதி நிறுவனத்தின் சிசிடிவி காட்சிகளை வைத்து மர்மநபரை தேடி வருகிறார்கள். சில்லறை நாணயங்கள் கொடுக்கிறோம் என உப்பு மூட்டைகளை கொடுத்து கொள்ளையடித்த மர்ம நபர்கள் செயலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது

^