பிரசவத்தின் போது கவனக்குறைவால் கீழே விழுந்து பச்சிளம் குழந்தை உயிரிழப்பு

கோவை ராமகிருஷ்ணா மருத்துவமனையில் பிரசவத்தின் போது மருத்துவர்களின் கவனக்குறைவால் தவறி விழுந்து குழந்தை உயிரிழந்த சம்பவத்திற்கு நியாயம் கேட்டு குழந்தையின் பெற்றோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். கோவை மாவட்டத்தை சேர்ந்த விக்ரம் - பவித்ரா என்ற தம்பதியினருக்கு ராமகிருஷ்ணா மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது. ஆனால் குழந்தை இறந்துவிட்டதாக கூறியது பெற்றோர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இறப்பின் காரணத்திற்கு மருத்துவமனை தரப்பில் பல்வேறு காரணங்கள் சொல்லப்பட்டது. பின்னர் இறந்த ஆண் குழந்தையை பெற்றோரிடம் தரும்பொழுது தலையில் தொப்பி அணிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து சந்தேகமடைந்த பெற்றோர் தலையில் அணிவித்திருந்த தொப்பியை கழட்டி பார்த்தனர். அதில் குழந்தையின் தலையில் காயம் இருந்தது. இதையடுத்து ஆத்திரம் அடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் மருத்துவமனை நிர்வாகத்தில் விசாரித்த பொழுது குழந்தை மருத்துவர்கள் கையிலிருந்து தவறி விழுந்து விட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து இறந்த குழந்தையை கையில் வைத்தபடி பெற்றோர், உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் மருத்துவமனை முன்பு அமர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். அதேபோல மருத்துவமனை நிர்வாகத்தினர் இதுவரை எந்தவித பேச்சு வார்த்தை கூட நடத்தாதது கண்டிக்கத்தக்கது எனவும் உறவினர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். அதன்பின் காவல்துறையினர் உறவினர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்தனர்.

^