அழகிரியை நீக்க கோரி மனு...அடுத்த உட்கட்சி பூசல் !!!

தமிழக காங்கிரஸ் தலைவராக இருந்த திருநாவுக்கரசரை மாற்றி விட்டு புதிய தலைவராக கே.எஸ்.அழகிரியை, அக்கட்சியின் அகில இந்திய தலைவர் ராகுல் காந்தி கடந்த 2ந் தேதி இரவு நியமித்தார். தலைவராக நியமிக்கப்பட்ட கே.எஸ்.அழகிரி முறைப்படி  தலைவர் பொறுப்புகளை ஏற்றுக்கொண்டார். தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகமான சென்னை சத்தியமூர்த்தி பவனில் இந்த நிகழ்வு நடைப்பெற்றது. என்னதான் காங்கிரஸ் தலைமை புதிதாக ஒரு நடவடிக்கை மேற்கொண்டாலும், தமிழக காங்கிரஸ் கமிட்டியில் கோஷ்டி மோதல் என்பது தொடர் கதையாக உள்ளது. மாஜி தலைவர்கள் எல்லாம் கட்சிக்குள்ளே ஒரு அணியை உருவாக்கி மாநில தலைவர்களுக்கு குடைச்சல் கொடுப்பது என்பது வழக்கமாகி வருகிறது. அதற்கு சிறந்த உதாரணம் தற்போது தலைவர் பொறுப்பை விட்டு வெளியேறிய திருநாவுக்கரசு. இந்த நிலையில், கடந்த வாரம் தான் தலைவர் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ள கே.எஸ்.அழகிரிக்கு தற்போதே குடைச்சல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சில தகவல்கள் வெளியாகி உள்ளது. அதில், கே.எஸ்.அழகிரியின் சொந்த மாவட்டமான கடலூரில் உள்ள தெற்கு மாவட்ட தலைவர் எம்.என்.விஜயசுந்தரம் என்பவர் டெல்லி காங்கிரஸ் தலைமைக்கு கடிதம் ஒன்று எழுதியுள்ளாராம். அதில், கடலூர் மாவட்ட உண்மை தொண்டர்களின் கோரிக்கை என்ற பெயரில், தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரியை மாற்றிவிட்டு தகுதியான நபரை நியமிக்க வேண்டும் என அதில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாகவும்,மேலும் வருகிற 18ந் தேதி சிதம்பரம் காந்தி சிலை அருகே இந்த கோரிக்கையை வலியுறுத்தி பிரமாண்ட உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் புதிய தலைவருக்கு என்று 7 கேள்விகளை தயாரித்து,அதை அந்த கடிதத்தில் குறிப்பட்டு அதுவும் மாநில தலைமைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் உள்ளது. மேலும், கே.எஸ்.அழகிரியை தலைவராக நியமித்தால், பல தொண்டர்களுக்கு தற்போது மனவருத்தம் ஏற்பட்டு இருப்பதாகவும், ஆகவே அதனை கண்டித்தும், தகுதி வாய்ந்த தலைவரை நியமிக்க கோரியும் மகாத்மா காந்தி மற்றும் ராஜீவ் காந்தி சிலைகளுக்கு மனு அளிக்கும் போராட்டம் நடைபெறும். இப்படிக்கு உண்மை தொண்டர்கள் என அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாகவும் தகவல்கள் உள்ளது. தலைவராக பொறுப்பேற்று ஒரு வாரத்திற்குள் அவரது சொந்த மாவட்டமான கடலூரிலே கே.எஸ்.அழகிரிக்கு எதிர்ப்பு கிளம்பி உள்ளதாக வரும் தகவல்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

^