மார்ச் முதல் அமலுக்கு வரும் புதிய வரி விதிப்புகள்

மதுரையில் மார்ச் முதல் புதிய வரிவிதிப்புகள், ஏல நடைமுறைகள் அமலுக்கு வரும் நிலையில் மக்களுக்கு இடையூறு மற்றும் போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்படும் பகுதிகளிலுள்ள பார்க்கிங், கழிப்பறை, சந்தைகளை ஏலத்திற்கு கொண்டு வராமல் மாநகராட்சி நிர்வாகம் ரத்து செய்ய வேண்டும்.நகரில் அனைத்து வார்டுகளிலும் மாநகராட்சியால் பொதுக்கழிப்பறைகள் பயன்பாட்டிற்கு விடப்பட்டுள்ளன. போதிய பராமரிப்பு, கண்காணிப்பு இல்லாததால் இக்கழிப்பறைகளை மக்கள் புறக்கணிக்கின்றனர். வேறு வழியின்றி வரும் மக்களிடம் ஒப்பந்ததாரர்கள் வசூல் வேட்டை நடத்துகின்றனர். ஆனால் சுகாதாரம் கேள்விக்குறியாக உள்ளது. பல கழிப்பறைகள் மூடிக்கிடக்கின்றன. ஏலம் விடுவதில் உள்ள குளறுபடிகளால் இவற்றின் வருவாய் முறையாக மாநகராட்சிக்கு செல்வதில்லை. நுாறு சதவீத பயன் பாட்டில் இல்லாத கழிப்பறைகளை வரும் நிதியாண்டு ஏலத்தில் விடாமல் அவற்றை இடித்து விட்டு அந்த இடங்களை பிற பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும்.இதுபோல போக்குவரத்திற்கு இடையூறான இடங்களில் பார்க்கிங் அனுமதிக்கப்பட்டு அவையும் ஏலம் விடவுள்ளன.எந்த பகுதிகளில் பார்க்கிங் அனுமதிக்கலாம் என போக்குவரத்து போலீசாரின் தடையின்மை சான்று அளிக்கும் இடங்களில் மட்டுமே பார்க்கிங் அனுமதிக்க வேண்டும். தற்போது மீனாட்சி அம்மன் கோயில் பகுதியில் பல்வேறு கட்டமைப்பு பணிகள் நடக்கின்றன. இப்பகுதிகளில் உள்ள பார்க்கிங் ஏல முறையை மாநகராட்சி ரத்து செய்ய வேண்டும்.எல்லீஸ்நகர் பெரியார் பஸ் ஸ்டாண்டில் காலி செய்யப்பட்ட கடைகள் நடத்த அனுமதிக்கப்பட்டுள்ளது. அங்கு செவ்வாய் நடக்கும் வாரசந்தையும் அப்பகுதியில் தேவையற்ற நெரிசலை ஏற்படுத்தும். பைபாஸ் ரோட்டில் காளவாசலில் மேம்பால பணிகள் நடக்கிறது. இங்கு எடுக்கும் மண் அனைத்தும் பைபாஸ் சர்வீஸ் ரோட்டோரம் கொட்டப்படுகிறது. இந்த ரோட்டிலும் சர்வீஸ் ரோடுகள் முழுமையாக பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படுகிறது. இதனால் வெள்ளியன்று நடக்கும் சந்தையையும் ஏலத்தில் சேர்க்காமல் மாநகராட்சி ரத்து செய்து வேண்டும். இதனால் இப்பகுதியில் நெரிசல் குறையும். வாரசந்தை, தெருவோரசந்தை நடத்த போக்குவரத்து போலீசாரின் தடையின்மை சான்று பெறும் முறையை உருவாக்கி அதை நடைமுறைப்படுத்த வேண்டும்.குறைந்த வருவாய்க்காக மக்களை சிரமப்படுத்தும் முயற்சிகளை மாநகராட்சி நிர்வாகம் கைவிட வேண்டும்.

^