கூட்டணி பரம ரகசியம்: ஓபிஎஸ்

திருவான்மியூரில் உள்ள மருந்தீசுவரர் கோயிலில் இன்று (பிப்ரவரி 3) நடைபெற்ற சமபந்தி விருந்தில் ஓ.பன்னீர்செல்வம் கலந்துகொண்டார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், “அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தோழமை உணர்வுள்ள கூட்டணி கட்சிகள், அரசியல் ரீதியான கட்சிகள், மாநிலக் கட்சிகள் மற்றும் தேசியக் கட்சிகள் அதிமுகவுடன் கூட்டணி அமைப்பதற்கு விருப்பம் தெரிவித்து பேசி வருகின்றன. அது பரம ரகசியம். முடிச்சு அவிழ்க்கப்பட்டவுடன் ஊடகங்களுக்குத்தான் முதலில் தெரிவிக்கப்படும்” என்றார்.மேலும் தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்பில் அதிமுக இருந்தாலும், பாஜகவுடன் கூட்டணி வைக்கும்பட்சத்தில் கூட்டணித் தலைமையை பாஜகவே ஏற்கும் என்று கடந்த சில வாரங்களுக்கு முன்பு வதந்திகள் பரவியது. மீன்வளத் துறை அமைச்சர் ஜெயகுமார் இதுகுறித்து பதிலளித்துள்ள நிலையில், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று அதற்கு விளக்கம் அளித்தார். “தமிழகத்தைப் பொறுத்தவரையில் அதிமுகதான் இன்றைக்கு இருக்கிற மிகப்பெரிய பலம் வாய்ந்த அரசியல் கட்சியாக இருக்கிறது. ஆகவே எங்களுடைய தலைமையில்தான் கூட்டணி அமையும். ஒருமித்தக் கருத்தோடு கூட்டணி பேச்சுவார்த்தைகள் முடிவுக்கு கொண்டுவரப்படும்” என்றார். முன்னதாக இன்று காலையில், அண்ணாவின் 50ஆவது நினைவு நாளையொட்டி முதல்வர் கே.பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அதிமுக மூத்த நிர்வாகிகள் மதுசூதனன், கே.பி.முனுசாமி, அமைச்சர் ஜெயகுமார் உள்ளிட்ட பலர் சென்னை மெரினாவில் உள்ள அண்ணா நினைவிடத்துக்குச் சென்று அஞ்சலி செலுத்தினர்.

^