இலங்கை அணியின் பந்துகளை அடித்து துவைத்த அவுஸ்திரேலிய வீரர்கள்!

இலங்கை அணிக்கு எதிரான டெஸ்டின் முதல் நாளில் பர்ன்ஸ், ஹெட் இருவரின் அபார சதத்தால் அவுஸ்திரேலிய அணி 4 விக்கெட் இழப்புக்கு 384 ஓட்டங்கள் குவித்துள்ளது. அவுஸ்திரேலியா-இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி கேன்பெர்ராவில் இன்று தொடங்கியது. நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலிய அணி துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது. அதன்படி தொடக்க வீரர்களாக ஹாரிஸ் மற்றும் ஜோ பர்ன்ஸ் இருவரும் களமிறங்கினர். ஹாரிஸின் விக்கெட்டை பெர்னாண்டோ வீழ்த்தினார். அதன் பின்னர் வந்த கவாஜாவையும் அவர் 3 பந்துகளிலேயே அவுட் ஆக்கினார். அதனைத் தொடர்ந்து களமிறங்கிய மார்னஸ் லபுஸ்சேன் 6 ஓட்டங்கள் எடுத்த நிலையில் கருணரத்னே பந்துவீச்சில் டிக்வெல்லவிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். இதனால் அவுஸ்திரேலிய அணி 28 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது. அப்போது களம் கண்ட டிராவிஸ் ஹெட் தொடக்க வீரர் ஜோ பர்ன்ஸுடன் இணைந்து ரன் வேட்டையை தொடங்கினார். இந்த ஜோடி இலங்கையின் பந்துவீச்சை சிதறடித்தது. இருவரும் நங்கூரம் போல் நிலைத்து நின்று ஆடினர். பவுண்டரிகளாக விளாசிய பர்ன்ஸ்-ஹெட் இருவருமே சதத்தினை கடந்தனர். ஹெட்டிற்கு இது முதல் சர்வதேச டெஸ்ட் சதமாகும். இவர்களின் நிலையான ஆட்டத்தினால் அவுஸ்திரேலிய அணி 300 ஓட்டங்களை கடந்தது. இந்த ஜோடியை பிரிக்க இலங்கை பந்துவீச்சாளர்கள் போராடிய நிலையில், அணியின் ஸ்கோர் 336 ஆக இருந்தபோது ஹெட்டின் விக்கெட்டை பெர்னாண்டோ வீழ்த்தினார். ஹெட் 204 பந்துகளில் 21 பவுண்டரிகள், ஒரு சிக்சருடன் 161 ஓட்டங்கள் எடுத்தார். அதன் பின்னர் 87 ஓவர்கள் வீசப்பட்ட நிலையில் முதல் நாள் ஆட்டம் முடித்துக்கொள்ளப்பட்டது. அவுஸ்திரேலியா 4 விக்கெட் இழப்புக்கு 384 ஓட்டங்கள் குவித்தது. ஜோ பர்ன்ஸ் 172 ஓட்டங்களுடனும், பேட்டர்சன் 25 ஓட்டங்களுடனும் களத்தில் உள்ளனர். இலங்கை தரப்பில் பெர்னாண்டோ 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

^