விரக்தியான ஸ்டாலின்

அனைவருக்கும் வீடு கட்டும் திட்டம், அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம், விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் 6000 நிதி வழங்குவது, வருமான வரி விலக்கிற்கான உச்சவரம்பை 5 லட்சமாக உயர்த்தியது போன்ற மத்திய பட்ஜெட்டில் வெளியான அறிவிப்புகள் வரவேற்கதக்கது என முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.இன்று சேலத்தில் உள்ள அஸ்தினம்பட்டியில் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் பழனிசாமி இவ்வாறு கூறினார். மேலும் அவர் பேசுகையில்,அரசு என்பது மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்பதற்காக தான் உள்ளது. ஏழை, எளிய மக்களின் நலனுக்காக தான் உள்ளது. நல்ல திட்டங்களை அறிவித்தால் அது தேர்தலுக்கான அறிவிப்பு என்று கூறுவதும், நல்ல திட்டங்களை அறிவிக்கவில்லை என்றால் திட்டங்கள் இல்லை என்று கூறுவது ஏற்புடையது அல்ல என தெரிவித்தார்.தேர்தல் அறிவித்த பின்பு தான் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை தொடங்கும். ஜெயலலிதா இருந்த பொழுது வேட்பளாரை முன்கூட்டியே அறிவிப்பார்கள். அதனடிப்படையிலே தற்போது ஒவ்வொரு தொகுதியிலும் விருப்பமுள்ளவர்கள் வேட்பு மனுவினை பூர்த்தி செய்து வரும் 4 -10ந் தேதிக்குள் தலைமை கழகத்தில் அளிக்க உள்ளார்கள் என தெரிவித்தார்.அரசு ஊழியர்கள் தங்களது உரிமைக்காக போராடுகிறார்கள், அரசு ஊழியர்கள் போராட்டத்தை ஒடுக்குவது என்று கூறுவது தவறானது. அவர்கள் கேட்கும் கோரிக்கைகளில் நியாமான கோரிக்கைகள் அனைத்தினையும் அரசு நிறைவேற்றி வருவதாகவும் கூறினார். அரசு ஊழியர்கள் மட்டுமில்லை யார் போராட்டம் செய்தாலும் என்ன நடவடிக்கை எடுக்கப்படுமா அதே நடவடிக்கை தான் அரசு ஊழியர்கள் மீதும் தற்போது எடுக்கப்பட்டுள்ளதாக கூறினார்.மக்களின் குறைகளை கேட்க வேண்டும் என்பதற்காக மு.க.ஸ்டாலின் கிராம சபைக்கூட்டம் நடத்தவில்லை என்றும், எங்களை தாக்கி பேசவேண்டும் என்பதற்காக தான் தற்போது அவர் கிராமசபை கூட்டம் நடத்துவதாகவும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நடத்தி வரும் கிராம சபை கூட்டத்தை முதல்வர் விமர்சித்தார்.ஜெயலலிதா ஆட்சியில் இருந்தப்போதும், தற்போது தாங்கள் ஆட்சி செய்த போதும் என்ன நன்மைகள் தங்களுக்கு கிடைத்துள்ளது என்பதை கிராம மக்கள் சிந்தித்து சீர்தூக்கி பார்த்தாலே மக்கள் சரியான நபர்களுக்கு வாக்களிப்பார்கள் எனவும் கூறினார் .எங்களது ஆட்சியை கழைக்க எவ்வளவோ முயற்சி செய்தார், போராட்டங்களை தூண்டிவிட்டார், பொய் வழக்குகள் போட்டார், ஆனால் அனைத்திலும் தோல்வி அடைந்துவிட்டார். இறுதியில் பொய்கள் அனைத்தும் தோற்று, தர்மம் தான் வென்றுள்ளது. ஆகையால் விரக்தியின் விளிம்புக்கே சென்று அவர் இதைப்போன்ற கருத்துக்களை கிராமம், கிராமமாக சென்று கருத்து தெரிவித்து வருகிறார்.அவர் உள்ளாட்சித்துறை அமைச்சர் இருந்த போது இதைப்போன்று ஏன் அவர் கிராமம், கிராமமாக சென்று மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்துக்கொடுக்கவில்லை எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.அதைப்போல் தற்போது வெளியாகிற கருத்து கணிப்புகள் அனைத்தும் தவறானது என்றும், ஒரு சிலரை திருப்திப்படுத்த இதைப்போன்ற கருத்துக்களை அவர்கள் வெளியிடுவதாகவும், கடந்த 2016 தேர்தலில் நானும், அமைச்சர் தங்கமணியும் தேர்தலில் தோல்வி பெறுவோம் என அப்போது சில தனியார் சேனல்கள் கருத்து கணிப்புகளை வெளியிட்டனர். ஆனால் சேலம் மாவட்டதிலே அதிகமான வாக்கு வித்தியாசத்தில் தானும், நாமக்கல்லில் தங்கமணியும் வெற்றி பெற்றோம் என தெரிவித்தார்.அதைப்போல் சேலத்தில் வெறும் 3 தொகுதிகளில் மட்டும் தான் அதிமுக வெல்லும் என கடந்த 2016ம் ஆண்டு கருத்துக்கணிப்புகள் வெளியிட்டனர். ஆனால் சேலத்தில் 10 தொகுதிகளில் அதிமுக வெற்றி பெற்றதாகவும் அவர் குறிப்பிட்டார்.     

^