அவனியாபுரம் ஜல்லிக்கட்டின் போது யாருக்கும் முதல் மரியாதை கிடையாது

அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு நடத்த ஓய்வுபெற்ற நீதிபதி, வழக்கறிஞர் ஆணையர் கொண்ட குழுவையும் அனைத்துச் சமூகத்தினர் 16பேர் அடங்கிய ஆலோசனைக் குழுவையும் உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அமைத்துள்ளது.

மதுரை அவனியாபுரத்தில் ஜனவரி 15இல் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்கவும், உரிய பாதுகாப்பு அளிக்கவும் கோரி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் எதிர்மனுதாரர்களாகத் தங்களைச் சேர்க்கக் கோரிச் சிலர் மனு தாக்கல் செய்தனர். அதில் ஜல்லிக்கட்டு விழாக்குழுத் தலைவர் கணக்கு வழக்குகளைத் தெரிவிப்பதில்லை எனக் குறிப்பிட்டுள்ளனர். அனைத்துச் சமுதாயத்தினரையும் ஜல்லிக்கட்டு விழாக்குழுவில் சேர்க்கக் கோரிக்கை விடுத்தனர்.

வழக்கை விசாரித்த நீதிபதிகள் சசிதரன், ஆதிகேசவலு அமர்வு உத்தரவிட்டதையடுத்து நேற்று மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர், மாநகரக் காவல் ஆணையர் ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராகினர். ஜல்லிக்கட்டு நடத்த ஓய்வுபெற்ற நீதிபதி ஒருவர், வழக்கறிஞர் ஆணையர்கள் 3பேர் கொண்ட குழுவும் அதற்கு ஆலோசனை வழங்க அனைத்துச் சமுதாயத்தினர் கொண்ட 16பேர் கொண்ட குழுவையும் நீதிமன்றமே அமைக்கும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.

இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது பல்வேறு சமுதாயத்தைச் சேர்ந்த 16பேரின் பெயர்ப்பட்டியல் நீதிபதியிடம் வழங்கப்பட்டது. இதைப் பதிவுசெய்த நீதிபதிகள் எந்த ஒரு தனியாளுக்கோ சமுதாயத்தினருக்கோ காளைக்கோ முதல் மரியாதை வழங்கக் கூடாது என்றும், கணக்கு வழக்கை முறையாகப் பராமரிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர். விரிவான உத்தரவு இன்று மாலை பிறப்பிக்கப்படும் என்றும் தெரிவித்தனர். ஜல்லிக்கட்டு விழாக்குழுவை அமைக்க மாவட்ட நிர்வாகம் தவறியதால் நீதிமன்றம் தலையிட வேண்டியதாககிவிட்டது என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். 

^