கோவை, திருப்பூர், ஈரோடு பகுதிகளில் விஸ்வாசம் படத்திற்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்

விஸ்வாசம் திரைப்படத்தைக் கோவை, திருப்பூர், ஈரோடு பகுதிகளில் திரையிட விதிக்கப்பட்ட தடையைச் சென்னை உயர்நீதிமன்றம் நீக்கியுள்ளது.அஜித்குமார் நடிப்பில், சிவா இயக்கியுள்ள விஸ்வாசம் திரைப்படம் நாளை திரையிடப்பட உள்ளது. சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தத் திரைப்படத்தைக் கோவை, திருப்பூர், ஈரோடு பகுதிகளில் வெளியிட சாய்பாபா என்பவர் உரிமை பெற்றுள்ளார்.சாய்பாபா தன்னிடம் வாங்கிய 78 இலட்சம் ரூபாயைத் திருப்பித் தராததால் கோவை, திருப்பூர், ஈரோடு பகுதி திரையரங்குகளில் விஸ்வாசம் படத்தை வெளியிடத் தடை கோரி, நிதி நிறுவன அதிபர் உமாபதி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார். அந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, கோவை, திருப்பூர், ஈரோடு பகுதிகளில் விஸ்வாசம் திரைப்படத்தை வெளியிடத் தடைவிதித்தார்.இதையடுத்து, படத் தயாரிப்பு நிறுவனம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், உமாபதிக்கு 35 லட்சம் ரூபாயை உடனே வழங்குவதாகவும், மீதித் தொகையை 4 வாரத்துக்குள் வழங்குவதாகவும் உறுதியளித்ததுடன் தடையை நீக்கக் கோரினார். இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி கோவை, திருப்பூர், ஈரோடு பகுதிகளில் விஸ்வாசம் படத்தைத் திரையிட விதித்திருந்த தடையை நீக்கி உத்தரவிட்டார். 

^