உதயநிதிக்கு எம்எல்ஏவாக போட்டியிட ஆர்வமில்லை?

சமூக வலைத்தளங்களில் உதயநிதி ஸ்டாலின் பெயரில் திருவாரூர் தொகுதிக்கு விருப்பமனு போட்டதாக ஒரு படிவம் பரவி வருகிறது. அண்மையில்தான் தனக்கு எம்.எல்.ஏ. சீட் மீது ஆர்வமில்லை என்று உதயநிதி பேட்டி கொடுத்திருந்தார். இது தொடர்பாக உதயநிதி வட்டாரத்தில் விசாரித்தோம்.‘உதயாவின் நலம் விரும்பிகள் யாராவது பணம் கட்டியிருக்கலாம். அதில் அவரது வயது 41 என குறிப்பிட்டு, எந்த ஆண்டு முதல் கட்சியில் உறுப்பினர் என்ற கேள்விக்கு 1977 முதல் எனக் குறிப்பிட்டிருக்கிறார்கள். இதில் இருந்தே இது ரசிகர்கள் ஆர்வத்தில் செய்தது என்பது தெரிகிறது. மற்றபடி அவருக்கு திருவாரூரில் போட்டியிடும் எண்ணம் இல்லை. ஆனால், திருவாரூரில் திமுகவில் யார் போட்டியிட்டாலும் அவர்களை ஜெயிக்க வைக்க எல்லா முயற்சிகளையும் முன்னின்று செய்ய உதயா முடிவு செய்திருக்கிறார்.திருவாரூர் தேர்தல் வெற்றியில் உதயாவின் பங்களிப்பு மிக முக்கியமானதாக இருக்கும். அதற்காக தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் இப்போதே பேச ஆரம்பித்துவிட்டார். உதயா ரசிகர் மன்ற நிர்வாகிகள் திருவாரூரில் தனி டிராக்கில் இறங்கி இப்போதே சில வேலைகளை பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள். திருவாரூரில் உள்ள சில ஹோட்டல்களை உதயா ரசிகர் மன்றத்தினர் அட்வான்ஸ் புக்கிங் செய்திருக்கிறார்கள். ‘இந்த வெற்றி தன்னால் சாத்தியமானது’ என திமுகவினர் சொல்ல வேண்டும் என்பதே உதயநிதியின் எண்ணம்’என்று சொல்கிறார்கள்.

^