​திருவாரூர் இடைத்தேர்தல் வேட்பாளர் ரெடி..!

. .

அதிமுக, திமுக, அமமுக மூன்று கட்சிகளிடையே பலத்தபோட்டி நிலவுவதால் மூன்று கட்சிகளும் வலுவான வேட்பாளரை களம் இறக்க உள்ளன. அந்த அடிப்படையில் திமுக வட்டாரத்தில் திமுக வேட்பாளர்களுக்கான விருப்ப மனு பெறப்படுகிறது. இதில் உதயநிதி ஸ்டாலின் பெயரிலும் விருப்பமனுக்கள் அளிக்கப்பட்டு அதை ஒட்டி விவாதங்கள் ஓடினாலும் கே.எஸ்.அதியமான் பட சினிமா ஷூட்டிங்கில் பிசியாக இருக்கும் உதயநிதி அதற்காக கடந்த டிசம்பர் மாத இறுதியில் பிஜி தீவுக்குச் சென்றார். தேர்தலுக்கு முதல் நாள்தான் அவர் சென்னை திரும்புகிறார். திமுக வட்டாரத்தில் திருவாரூரில் வலுவான வேட்பாளர் என்பதைத் தாண்டி அனுபவமிக்க வேட்பாளராக பூண்டி கலைவாணன் அனைவராலும் பார்க்கப்படுகிறார். திமுக தலைவர் கருணாநிதிக்காக தலைமை தேர்தல் ஏஜெண்டாக பணியாற்றி அவரது தொகுதியை முற்றும் அறிந்தவர், ஆகவே பூண்டி கலைவாணன் தான் திமுக வேட்பாளர் என்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. அதிமுக வேட்பாளராக திமுகவுக்கு போட்டியில் கடுமையாக சவால் கொடுக்கும் நபராக மாநிலங்களவை உறுப்பினராக இருக்கும் வைத்தியலிங்கம் பார்க்கப்படுகிறார். அவரை நிறுத்துவதன் மூலம் திமுகவின் வெற்றியைத் தடுக்க முடியும் வெற்றியின் படிக்கட்டைத் தொட முடியும் என அதிமுக வட்டாரம் தகவல் தெரிவிக்கிறது. அவ்வாறு வைத்தியலிங்கம் நிறுத்தப்படாவிட்டால் திருவாரூர் ஒன்றியச்செயலாளர் பன்னீர்செல்வம் நிறுத்தப்படலாம் என அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இவர்தான் கடந்த தேர்தலில் கருணாநிதியிடம் தோல்வி அடைந்தவர். இதில் அமமுக வேட்பாளரைத்தான் இரண்டு கட்சிகளும் எதிர்ப்பார்க்கின்றன. அமமுக திருவாரூர் தொகுதியில் வலுவாக இருப்பதாக அமமுக கட்சிவட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அமமுகவில் ஏற்கெனவே குடவாசல் ராஜேந்திரன்தான் வேட்பாளர் என முடிவு செய்துவிட்டதாக சொல்லப்படுகிறது. அவர் வலுவான வேட்பாளர் தொகுதியில் மிகுந்த செல்வாக்கு உடையவர் என்று கூறுகின்றனர். ஆனால் குடவாசல் ராஜேந்திரன் உடல் நிலை சரியில்லாமல் இருப்பதாக தகவல் ஓடுகிறது. இதனால் தொகுதியில் செல்வாக்கு மிக்க காமராஜ் நிறுத்தப்படுவார் என்றும் கூறுகின்றனர். இவர் அமமுக மாவட்டச் செயலாளராக இருக்கிறார். இவரும் திமுகவுக்கு வலுவான சவாலாக இருப்பார் என கூறுகின்றனர். .

^