செல்போன் பறிப்பில் ஈடுபட்ட 3 மாணவர்கள் பிடிபட்டனர்

மேற்கு வங்கத்தை சேர்ந்த தாரீக் உல் இஸ்லாம் (20). பருத்திப்பட்டு பகுதியில் தங்கி, தனியார் கட்டுமான நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். கடந்த 29ம் தேதி இவரை 3 பேர் வழிமறித்து, சரமாரியாக தாக்கி, அவரது செல்போனை பறித்து சென்றனர். விசாரணையில், திருவேற்காடு தெய்வநாயகி நகரை சேர்ந்த பிரதீப் (19) ஜெயம் நகரை சேர்ந்த ரஞ்சித் (19) லட்சுமி நகரை சேர்ந்த சண்முகம் (19) ஆகியோர் செல்போன் பறிப்பில் ஈடுபட்டதும், இவர்கள் வேப்பம்பட்டு பகுதியில் உள்ள தனியார் கலைக் கல்லூரி மாணவர்கள் என்பதும் தெரிந்தது. அவர்களை நேற்று முன்தினம் மாலை கைது செய்தனர். அம்பத்தூர் அடுத்த கள்ளிக்குப்பம் சக்தி நகர் 1வது தெருவை சேர்ந்த பாலிடெக்னிக் மாணவன் லோகேஷ் (19), நெல்லிக்குப்பம் அருகில் நடந்து சென்றபோது பைக் மோதி இறந்தார். திருநின்றவூர் அம்பிகாபுரம் கே.ஜி நகர் மெயின் ரோட்டை சேர்ந்த சாப்ட்வேர் நிறுவன ஊழியர் சுரேந்திரபாபு (30), நேற்று முன்தினம் இரவு திருநின்றவூர் சிடிஎச் சாலையில் பைக்கில் சென்றபோது, லாரி மோதி இறந்தார்.அம்பத்தூர் ஞனமூர்த்தி நகர் பஜனை கோயில் தெருவை சேர்ந்த லட்சுமி (58), நேற்று தனது மகன் கார்த்திகேயனுடன் பைக்கில் கொரட்டூர் கிழக்கு அவென்யூ சாலையில் சென்றபோது வேகத்தடை மீது ஏறிய பைக் நிலை தடுமாறி கீழே விழுந்தது. இதில் படுகாயமடைந்த லட்சுமி சம்பவ இடத்திலேயே இறந்தார்.தாம்பரம் அடுத்த செம்பாக்கம், பவள நாச்சியார் தெருவை சேர்ந்த ஓய்வு பெற்ற வங்கி ஊழியர் சந்திரசேகர் (74). இவர் நேற்று முன்தினம் இரவு வேளச்சேரி பிரதான சாலையில், ராஜகீழ்ப்பாக்கம் அருகில் நடந்து சென்றபோது, பைக் மோதி இறந்தார்.மதுரவாயல் அடுத்த வானகரம் பகுதியில் உள்ள இருசக்கர உதிரிபாகங்கள், டிஜிட்டல் பேனர் மற்றும் பெட்டிக்கடை என அடுத்தடுத்து 3 கடைகளின் பூட்டை உடைத்து, கல்லா பெட்டியில் இருந்த ₹48 ஆயிரத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். ஆவடி வீட்டு வசதி வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் முரளி. இவரது மகன் லோகேஸ்வரன் (24). தந்தை, மகனுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் மனமுடைந்த லோகேஸ்வரன், நேற்று முன்தினம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். விருதுநகர் மாவட்டம், ஆத்தூர் அடுத்த சுப்பையாபுரம், கிழக்கு தெருவை சேர்ந்த சிவசங்கர் (23), சென்னையில் தங்கி தனியார் நிறுவனத்தில் உணவு விற்பனை பிரதிநிதியாக பணிபுரிந்து வந்தார். நேற்று மதியம் திருநீர்மலை சாலையில் உணவை விநியோகம் செய்வதற்காக சிவசங்கர் பைக்கில் சென்றபோது லாரி மோதி இறந்தார்.போக்சோவில் வாலிபர் கைது: திருமுல்லைவாயல் சோழன் நகரை சேர்ந்த 17 வயது சிறுமி, ஆவடியில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார். இச்சிறுமியை கொண்டம நல்லூர் கிராமத்தை சேர்ந்த ஜெயக்கிருஷ்ணன் (22) என்பவர் காதலித்து, திருமணம் செய்வதாக ஏமாற்றி, கர்ப்பமாக்கி உள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில், போலீசார் நேற்று முன்தினம் ஜெயக்கிருஷ்ணனை போக்சோ சட்டத்தில் கைது செய்து, பூந்தமல்லி நீதிபதி வீட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.சிறை கைதி திடீர் சாவு: செங்கல்பட்டு காவல் சரக எல்லைக்கு உட்பட்ட பகுதியில் கடந்த 2014ம் ஆண்டு நடந்த ஒரு கொலை வழக்கில், ஒடிசா மாநிலத்தை சேர்ந்த தேசசாங் (52) என்பவர் கைது செய்யப்பட்டார். விசாரணைக்கு பிறகு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். தேசசாங்குக்கு கடந்த ஒரு மாதமாக ரத்த சோகை ஏற்பட்டு அவதிப்பட்டார். இதையடுத்து கடந்த 22ம் தேதி சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று இறந்தார்.

^