தவறு செய்தால் ஜெயிலுக்கு போகவும் தயார் : விஷால்

தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவரான விஷால் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை சுமத்தி உள்ள தயாரிப்பாளர்கள் சிலர், தி.நகரில் உள்ள சங்க அலுவலகத்திற்கு பூட்டு போட்டனர். இதை உடைக்க விஷால் சங்க அலுவலகத்திற்கு வந்தபோது போலீசார் அவரை தடுத்தி நிறுத்தினர்அங்கு வாக்குவாதம் நடந்த நிலையில் விஷால் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டு தனியார் திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்டனர். விஷால் மீது இரு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து மாலையில் விஷால் உள்ளிட்ட அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விஷால், மிகவும் வேடிக்கையாக இருக்கிறது. செய்யாத குற்றத்திற்காக தண்டனை அனுபவித்துள்ளேன். தயாரிப்பாளர்கள் சங்கத்தில் உறுப்பினரே இல்லாதவர் ரித்தீஷ். முறைகேடாக பெயரை மாற்றி அவரே தன்னை உறுப்பினராக்கி கொண்டார். சங்கத்தில் உறுப்பினர் அல்லாதவர்கள் தலையிட்டு பிரச்னை செய்கின்றனர். முறைகேடாக பூட்டு போட்டவர்கள் மீது போலீசார் நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால் தவறு செய்யாத எங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ரூ.7 கோடி முறைகேடு நடந்திருப்பதாக கூறுவது தவறானது. முறையாக விண்ணப்பித்து கணக்கு கேட்டால் நிச்சயம் சொல்வோம். தவறு செய்தால் ஜெயிலுக்கு போகவும் நான் தயாராக உள்ளேன்.நலிந்த தயாரிப்பாளர்களுக்கு உதவவே முயற்சி எடுத்து வருகிறோம். நல்லது செய்வதற்கு பெயர் முறைகேடு என்றால், அதை தொடர்ந்து செய்வேன். கண்டிப்பாக இளையராஜா நிகழ்ச்சியை நடத்தியே தீருவோம். என்ன பிரச்னைகள் வந்தாலும் அதை முறியடித்து நிகழ்ச்சியை வெற்றிகரமாக நடத்துவோம். இவ்வாறு பேசினார். 

^