ஐசிசி டெஸ்ட் ரேங்கிங் நம்பர்-1 இடத்தில் கோஹ்லி

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐசிசி) டெஸ்ட் ரேங்கிங் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இதில் பேட்ஸ்மேன்கள் பிரிவில் விராத் கோஹ்லி தொடர்ந்து நம்பர்-1 இடத்தை தக்க வைத்துள்ளார். இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான டெஸ்ட் தொடரில் 2 போட்டிகள் முடிந்துள்ள நிலையில், ஐசிசி டெஸ்ட் வீரர்கள் ரேங்கிங் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இதில் பேட்ஸ்மேன்கள் பட்டியலில், இந்திய அணி கேப்டன் விராத் கோஹ்லி தொடர்ந்து முதலிடத்தை தக்க வைத்துள்ளார். அவர், 934 புள்ளிகளுடன் நம்பர்-1 பேட்ஸ்மேனாக உள்ளார். நியூசிலாந்து அணி கேப்டன் கேன் வில்லியம்சன் 915 புள்ளிகளுடன் 2வது இடத்தில் உள்ளார். புஜாரா 816 புள்ளிகளுடன் 4வது இடத்தில் நீடிக்கிறார். ரகானே மூன்று இடங்கள் முன்னேறி 15வது இடத்தையும், ரிஷப் பன்ட் 11 இடங்கள் முன்னேறி 48வது இடத்தையும் பிடித்துள்ளனர். 2வது டெஸ்டில் சதம் அடித்த ஆஸ்திரேலிய அணி துவக்க வீரர் ஆரோன் பிஞ்ச் 72வது இடத்திலிருந்து 17வது இடத்துக்கு முன்னேறி உள்ளார். பந்துவீச்சில் 882 புள்ளிகளுடன் தென் ஆப்ரிக்காவின் ரபாடா முதலிடத்தில் உள்ளார். ரவீந்திர ஜடேஜா 796 புள்ளிகளுடன் 5வது இடத்திலும், அஷ்வின் 778 புள்ளிகளுடன் 6வது இடத்திலும் உள்ளனர். 2வது டெஸ்டில் ஆஸ்திரேலிய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்த சுழற்பந்துவீச்சாளர் நாதன் லயான் 7வது இடத்திற்கும், வேகப்பந்து வீச்சாளர் ஹேசல்வுட் 9வது இடத்திற்கும் முன்னேறி உள்ளனர்.பெர்த்தில் 5 விக்கெட் வீழ்த்திய பூம்ரா 5 இடங்கள் முன்னேறி 28வது இடத்தையும், 2வது இன்னிங்சில் 6 விக்கெட் கைப்பற்றிய முகமது ஷமி 2 இடங்கள் முன்னேறி 21வது இடத்தையும், இஷாந்த் 26வது இடத்திற்கும் முன்னேறி உள்ளனர். ஆல் ரவுண்டர்கள் வரிசையில் ஹனுமா விஹாரி 84ல் இருந்து 65வது இடத்திற்கு முன்னேறி உள்ளார்.

^