மகளிர் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக டபிள்யு.வி.ராமன் தேர்வு

மகளிர் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக டபிள்யு.வி.ராமன் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாக உள்ளது. இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் இடைக்கால தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்ட ரமேஷ் பவாரின் பதவிக்காலம் கடந்த நவம்பர் 30ம் தேதியுடன் முடிவடைந்தது. சமீபத்தில் நடந்த உலக கோப்பை டி20 தொடரின் அரை இறுதியில் இந்திய அணி தோல்வி அடைந்தது. அப்போட்டியில், அனுபவ வீராங்கனை மித்தாலி ராஜ், 11 பேர் கொண்ட அணியில் இடம்பெறாதது பெரும் சர்ச்சையானது. பயிற்சியாளர் பவார் வேண்டுமென்றே தன்னை ஒதுக்குவதாக மித்தாலி குற்றம்சாட்டியதால் இருவருக்கும் இடையே கருத்து மோதல் ஏற்பட்டது. இந்த சம்பவத்தால், பவாரின் பதவிக்காலம் நீட்டிக்கப்படவில்லை. அடுத்த மாதம் நடக்கும் நியூசிலாந்து தொடர் வரை பயிற்சியாளராக பவார் இருப்பார் என அறிவித்த பிசிசிஐ, புதிய பயிற்சியாளருக்கான விண்ணப்பங்களை வரவேற்றது. இதில், 28 பேர் விண்ணப்பித்தனர். பவாரும் பயிற்சியாளராக விண்ணப்பித்தார். இதைத்தொடர்ந்து, நேர்முகத் தேர்வு நடத்த முன்னாள் கேப்டன் கபில்தேவ், கெய்க்வாட், சாந்தா ரங்கசாமி ஆகியோர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இக்குழுவினர் மும்பையில் நேற்று நேர்முகத் தேர்வு நடத்தினர். 28 விண்ணப்பதாரர்களில், தென் ஆப்ரிக்காவின் கேரி கிறிஸ்டன், இந்திய அணியின் முன்னாள் வீரர்கள் வெங்கடேஷ் பிரசாத், டபிள்யு.வி.ராமன், மனோஜ் பிரபாகர் உள்ளிட்ட 10 பேர் நேர்முகத் தேர்வுக்கு தேர்வாகினர். இதில், பவார், மனோஜ் பிரபாகர், ராமன் ஆகிய 3 பேரை நேரில் அழைத்து தேர்வு நடத்தினர்.கிறிஸ்டன் உட்பட 5 பேரிடம் ஆன்லைன் மூலமாகவும், பெண் விண்ணப்பதாரரான கல்பனா வெங்கடாச்சாரிடம் தொலைபேசி வாயிலாகவும் தேர்வு நடத்தப்பட்டது. இதையடுத்து, கிறிஸ்டன், ராமன், வெங்கடேஷ் பிரசாத் ஆகிய 3 பேர் இறுதித் தேர்வுக்கு தேர்வு செய்யப்பட்டதாகவும், நிர்வாகக் குழு இறுதி முடிவு எடுக்கும் என்றும் கெய்க்வாட் கூறினார். ஏற்கனவே, இந்திய ஆண்கள் அணிக்கு கிறிஸ்டன் பயிற்சியாளராக இருந்துள்ளார். அவரது பயிற்சியின் கீழ் தான் 2011ல் இந்திய அணி உலக கோப்பை வென்றது. இதனால், கிறிஸ்டனே தேர்வுக்குழுவின் முதல் சாய்சாக இருந்தார். ஆனால், அதே நேரத்தில், ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர் பெங்களூர் அணியின் பயிற்சியாளராக கிறிஸ்டன் இருந்து வருகிறார். இப்பணியை விட்டு விலக அவர் தயாராக இல்லை என்பதால் அடுத்த இடத்தில் உள்ள டபிள்யு.வி.ராமன் புதிய பயிற்சியாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. டபிள்யு.வி.ராமன் தேசிய கிரிக்கெட் அகடமியின் பேட்டிங் பயிற்சியாளராக உள்ளார். திறமையான இளம் வீரர்களை உருவாக்குவதில் இவரது பங்கு மிகப்பெரியது. இவர், இந்திய அணியில் 11 டெஸ்ட், 27 ஒருநாள் போட்டிகளில் விளையாடியவர். ராமன் பயிற்சியாளராவது தொடர்பாக இன்று அதிகாரப்பூர்வ வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

^