விசாரணைக்கு ஆஜரானார் அமைச்சர் விஜயபாஸ்கர்

. .

குட்கா விவகாரம் தொடர்பான சிபிஐ விசாரணைக்கு அமைச்சர் விஜயபாஸ்கர் ரகசியமாகச் சென்று ஆஜரானார். அவரிடம் எட்டு மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை நடத்தப்பட்டுள்ளது. சென்னையில் முகாமிட்டுள்ள சிபிஐ அதிகாரிகள், விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர். அமைச்சர் விஜயபாஸ்கரின் உதவியாளர் சரவணனுக்கு சம்மன் அனுப்பப்பட்ட நிலையில், கடந்த 7, 11 ஆகிய தேதிகளில் நேரில் ஆஜரானார். இதைத் தொடர்ந்து சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா ஆகியோருக்கும் சம்மன் அனுப்பப்பட்டது. இதையடுத்து நேற்று நுங்கம்பாக்கத்திலுள்ள சிபிஐ அலுவலகத்தில் ரமணா நேரில் ஆஜராகினார். அவரிடமும் அமைச்சர் விஜயபாஸ்கரின் உதவியாளர் சரவணனிடமும் குட்கா முறைகேடு தொடர்பாக பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டு பதில்கள் பெறப்பட்டுள்ளன. இதற்கிடையே விசாரணைக்கு அமைச்சர் விஜயபாஸ்கர் ஆஜரானாரா என்பது மர்மமாகவே இருந்துவந்தது. ஆனால், விசாரணைக்காக ரகசியமாக ஆஜராகியுள்ளார் விஜயபாஸ்கர். சொந்த காரைத் தவிர்த்த வாடகைக் காரில் விசாரணைக்கு வந்துள்ளார். காலை 8 மணிக்கு ஆரம்பித்த விசாரணையானது, 11 மணி நேரம் நடைபெற்று மாலை 8 மணியளவில் முடிவடைந்தது. அதன்பிறகு விஜயபாஸ்கர், ரமணா, சரவணன் ஆகியோர் சிபிஐ அலுவலகத்திலிருந்து புறப்பட்டுச் சென்றனர். மூவரிடமும் சிபிஐ அதிகாரிகள் கிடுக்குப்பிடி விசாரணையை மேற்கொண்டதாகவும், விசாரணையின்போது குட்கா அதிபர்களிடம் லஞ்சம் வாங்கியதை உதவியாளர் சரவணன் ஒப்புக்கொண்டதாகவும், ஆனால் அமைச்சர் விஜயபாஸ்கர் மறுப்பதாகவும் சிபிஐ அதிகாரிகள் வட்டாரங்களில் தகவல் வெளியாகியுள்ளது.

^