இலங்கை அரசியல் குழப்பத்துக்கு தீர்வு காண முயற்சி: சிறிசேனா-

இலங்கையில் பிரதமர் பதவியில் இருந்து ரணில் விக்ரமசிங்கேவை அதிபர் சிறிசேனா கடந்த அக்டோபர் 26ம் தேதி நீக்கிவிட்டு, முன்னாள் அதிபர் ராஜபக்சேவை பிரதமராக நியமித்தார். ஆனால், அவரால் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிருபிக்க முடியாமல் போனது. இதனால், நாடளுமன்றத்தை சிறிசேனா கலைத்து விட்டு தேர்தலை அறிவித்தார். இது ஜனநாயகத்துக்கு விரோதமானது என இலங்கை உச்ச நீதிமன்றத்தில் 13 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதை விசாரித்த நீதிமன்றம், சிறிசேனாவின் உத்தரவுக்கு கடந்த மாதம் 13ம் தேதி இடைக்கால தடை விதித்தது. இம்மாதம் உச்ச நீதிமன்றம் தனது இறுதி தீர்ப்பை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரணிலும், ராஜபக்சேவும் ‘நான்தான் பிரதமர்’ என கூறி வருகின்றனர். ‘பெரும்பான்மையை நிருபிக்காமல் ராஜபக்சேவை பிரதமராக அங்கீகரிக்க முடியாது’ என சபாநாயகர் கரு ஜெயசூர்யாவும் கூறிவிட்டார். ஆனாலும், பதவி விலக ராஜபக்சே மறுக்கிறார். இந்நிலையில், இந்த குழப்பத்துக்கு தீர்வு காண்பதற்காக ரணிலின் ஐக்கிய தேசிய முன்னணி, தமிழ் தேசிய கூட்டணியை நேற்று முன்தினம் இரவு பேச்சுவார்த்தைக்கு சிறிசேனா அழைத்தார். இதில், ரணில் கட்சியை சேர்ந்த எம்பி.க்கள் குழு கலந்து கொண்டது. ஆனால், இந்த பேச்சுவார்த்தையில் எந்த முன்னேற்றமும் ஏற்படாமல் தோல்வியில் முடிந்தது. இது குறித்து தமிழ் தேசிய கூட்டணி தலைவர் சம்பந்தன் கூறுகையில், ‘‘நாடாளுமன்றம் அடுத்த வாரம் கூடும்போது, பிரச்னைக்கு தீர்வு காணப்படும் என அதிபர் சிறிசேனா உறுதி அளித்துள்ளார்’’ என்றார். ஐக்கிய தேசிய கூட்டணி பொது செயலாளர் அகிலா விராஜ் கூறுகையில், ‘‘அதிபருடன் நாளை மீண்டும் பேச்சுவார்த்தை நடக்கிறது. நாங்கள் நம்பிக்கையுடன் இந்த பேச்சுவார்த்தையில் கலந்து கொள்வோம்’’ என்றார்.பிரச்னைக்கு தீர்வு காணசிறிசேனா புதிய திட்டம்இலங்கையில் பிரதமராக இருந்த ரணிலை நீக்கி தேவையற்ற அரசியல் குழப்பத்தை ஏற்படுத்திய அதிபர் சிறிசேனாவுக்கு சர்வதேச அளவில் அவப்பெயர் ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்னைக்கு ஜனநாயக முறையில் தீர்வு காணும்படி இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் வலியுறுத்தி வருகின்றன. இதனால், நாடாளுமன்றத்தில் மீண்டும் ஒருமுறை நம்பக்கை வாக்கெடுப்பை நடத்தி, அதில் வெற்றி பெரும் கட்சிக்கு பிரதமர் பதவியை வழங்கலாம் என்று சிறிசேனா ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே 3 நம்பிக்கையில்லா தீர்மானத்தில் ராஜபக்சே தோல்வி அடைந்து விட்டதால், ரணிலுக்கே மீண்டும் பிரதமராக வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.

^