பிரேமலதாவுக்கு விஜயகாந்த் கொடுத்த அட்வைஸ்

அரசியல் கூட்டணி நிலைப்பாடு குறித்தெல்லாம், தற்போது எந்த முடிவெடுக்க வேண்டாம். தற்போது புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உன்னால் இயன்றதைச் செய் என்று தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் தன்னிடம் கூறியதாக பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

தே.மு.தி.க பொருளாளர் பிரேமலதா தற்போது கஜா புயலால் பாதிக்கப்பட்ட அனைத்து மாவட்டங்களுக்கும் சென்று நிவாரண உதவிகளை அளித்து வருகிறார். அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் புயலால் பாதிக்கப்பட்ட அறந்தாங்கி, ஆலங்குடி பகுதிகளில் மக்களைச் சந்தித்து ஆறுதல் கூறி நிவாரணப் பொருட்களையும் பிரேமலதா அவர்களிடம் வழங்கினார்.

அதன் பின்னர் புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கஜா புயலால் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. விவசாயிகள் வாழ்வாதாரத்தை இழந்து தற்போது தவித்துக்கொண்டிருப்பதாகவும் கூறினார்.மத்தியக் குழு ஆய்வில், புயலால் அதிக சேதங்கள் ஏற்பட்டுள்ளதாகத் தகவல் அளிக்கப்பட்டுள்ளது. அவர்கள் அளிக்கும் அறிக்கையின்படி மத்திய அரசு நிதி ஒதுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.முதல்வர் மற்றும் அமைச்சர்கள்தான் மக்களைப் பார்க்கவில்லை என்றால் எதிர்கட்சித்தலைவரும் மக்களைச் சந்திக்காமல் ஒரு சில பகுதிகளை மட்டும் பார்த்துவிட்டுச் சென்றுவிட்டார் என அதிமுக மற்றும் திமுகவை அவர் விமர்சித்தார்.முன்பு, மழையைப் பயன்படுத்தி இடைத்தேர்தலை ரத்து செய்த அரசு, தற்போது புயலை காரணம் காட்டி இடைத்தேர்தலை நடத்த விடமாட்டார்கள் என்றும், அ.தி.மு.க-வும், தி.மு.க-வும் இடைத்தேர்தலைக் கண்டு அஞ்சுகிறது என்றும் குறிப்பிட்டார்.திருவாரூர் தொகுதியிலே தி.மு.க ஜெயிப்பது கடினமாகத்தான் இருக்கும் என்றும், ஒருவேளை நாடாளுமன்றத் தேர்தலுடன் இடைத்தேர்தல் வருவதற்கு வாய்ப்பு உள்ளது என்றும் கூறினார்.கூட்டணி அமைப்பது தொடர்பாக தேர்தல் நேரத்தில்தான் தே.மு.தி.க முடிவு செய்யும் என்றும், தற்போது கூட்டணி குறித்தெல்லாம் எந்த ஆலோசனையும் நடத்த வேண்டாம் என்றும், பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்து ஆறுதல் கூறுவதுடன் நிவாரணங்களை வழங்க வேண்டும் என்று விஜயகாந்த் தன்னிடம் கூறியதாகவும் தெரிவித்தார்.

^