என்னை அழிக்க துடிக்கிறார்கள்’’ - மிதாலி ராஜ் பரபரப்பு

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியில் இருந்து நீக்கப்பட்ட வீராங்கனை மிதாலி ராஜ், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்துக்கு பரபரப்பு கடிதம் எழுதியுள்ளார். அதில் அதிகாரத்தில் இருக்கும் சிலர் தன்னை அழிக்க முயலுவதாக பரபரப்பு குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார். மேற்கிந்தியத் தீவுகளில் நடைபெற்ற மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி அரை இறுதியில் இங்கிலாந்திடம் தோல்வி கண்டது. இந்த நிலையில் மிகவும் முக்கியமான நாக்-அவுட் ஆட்டத்தில் முன்னாள் கேப்டனான மிதாலிராஜ் நீக்கப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. காயத்திலிருந்து குணமடைந்த பின்னரும் அவர் அரை இறுதியில் சேர்க்கப்படாத விஷயம் பெரிதாகக் கிளம்பியுள்ளது. இதைத் தொடர்ந்து கேப்டன் ஹர்மன் பிரீத் கவுர், அணியின் நலனுக்காகவே இந்த முடிவு எடுக்கப்பட்டது என விளக்கம் அளித்து இருந்தார். நிர்வாகக் குழு (சிஓஏ) உறுப்பினரும், முன்னாள் இந்திய அணியின் கேப்டனுமான டயானா எடுல்ஜியும் கேப்டன் கவுர் எடுத்த முடிவை ஆதரித்து இருந்தார். இந்த விவகாரம் தொடர்பாக இந்திய கிரிக் கெட் கட்டுப்பாட்டு வாரியத்தை (பிசிசிஐ) நிர்வகித்து வரும் நிர்வாகக் குழு (சிஓஏ) விசாரணை நடத்த முடிவு செய்திருந்தது. இந்த நிலையில் மிதாலிராஜ் விவகாரம் தொடர்பாக கேப்டன் ஹர்மன் பிரீத் கவுர், பிசிசிஐ தலைமைச் செயல் அதிகாரி ராகுல் ஜோரி, பொது மேலாளர் (கிரிக்கெட் செயல்பாடுகள்) சபா கரீம் ஆகியோரைச் சந்தித்து விளக்கம் அளித்துள்ளார். தங்களது விரிவான அறிக்கையை, பிசிசிஐ நிரவாகக் குழுவிடம் ராகுல் ஜோரி, சபா கரீம் ஆகியோர் சமர்ப்பிக்கவுள்ளனர். அந்த அறிக்கைகளை பரிசீலித்த பிறகு இந்த விவ காரம் தொடர்பாக நிர்வாகக் குழு முடிவெடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விவகாரம் தொடர்பாக ராகுல் ஜோரியையும், சபா கரீமையும் வரும் 28-ம் தேதி சந்தித்து விளக்கம் அளிக்குமாறு பயிற்சியாளர் ரமேஷ் பவாருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இந்தநிலையில் தனக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது குறித்து மிதாலி ராஜ் பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார். பிசிசிஐ தலைமைச் செயல் அதிகாரி ராகுல் ஜோரி, பொது மேலாளர் (கிரிக்கெட் செயல்பாடுகள்) சபா கரீம் ஆகியோருக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது: கடந்த 20 ஆண்டுகளில் எனது மிக நீண்ட கிரிக்கெட் பாதையில் முதன்முதலாக மிகுந்த மன அழுத்தத்துக்கு ஆளாகியுள்ளோன், நொறுங்கி போயுள்ளேன். அதிகாரத்தில் உள்ள சில நபர்கள் என்னை அழிக்கவும், எனது நம்பிக்கையை சீர்குலைக்கவும் முயலுகின்றனர். இந்த சூழலில் இந்த தேசத்துக்கு எனது சேவை தேவையா என்று எனக்கு எண்ணத் தோன்றுகிறது. டி 20 அணியின் கேப்டன் கேப்டன் ஹர்மன் பிரீத் கவுருக்கு எதிராக நான் செயல்படவில்லை. என்னை அணியில் இருந்து விடுவிக்கும் பயிற்சியாளரின் முடிவுக்கு ஹர்மன் பிரீத் கவுர் ஆதரவு தெரிவித்ததை தவிர, அவரது வேறு எந்த முடிவையும் நான் எதிர்க்கவில்லை. நாட்டுக்காக உலக கோப்பையை வெல்ல வேண்டும் என விரும்பினேன். நல்ல வாய்ப்பை தவற விட்டுவிட்டோம். அணியின் முன்னாள் தலைவர் டயானா எடுல்ஜி மீது நான் எப்போதும் மரியாதை வைத்துள்ளேன். ஆனால், நிர்வாகக் குழு (சிஓஏ) உறுப்பினராக உள்ள டயானா எடுல்ஜி அவரது பதவியை பயன்படுத்தி எனக்கு எதிராக செயல்படுவது எனக்கு வேதனையை அளிக்கிறது. எனக்கு நடந்த அநீதி தொடர்பாக பலரும் எனக்கு தொலைபேசி மூலம் அழைத்து விசாரிக்கிறார்கள். இந்த அவமானத்தை என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை, நொறுங்கி போகிறேன். நிலைகுலைந்து போகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

^