ஜிம்பாப்வேயுடன் முதல் டெஸ்ட் 143 ரன்னில் சுருண்டது வங்கதேசம்

ஜிம்பாப்வே அணியுடனான முதல் டெஸ்டில், வங்கதேச அணி முதல் இன்னிங்சில் 143 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. சிலெட் நகரில் நடைபெற்று வரும் இப்போட்டியில், டாசில் வென்று பேட் செய்த ஜிம்பாப்வே அணி முதல் நாள் ஆட்ட முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 236 ரன் எடுத்திருந்தது. நேற்று ஆட்டத்தை தொடர்ந்த அந்த அணி முதல் இன்னிங்சில் 282 ரன் குவித்து ஆல் அவுட்டானது. கேப்டன் மசகட்சா 52, ஷான் வில்லியம்ஸ் 88, மூர் 63* ரன் விளாசினர். வங்கதேச பந்துவீச்சில் தைஜுல் இஸ்லாம் 6 விக்கெட் கைப்பற்றினார்.இதைத் தொடர்ந்து, முதல் இன்னிங்சை தொடங்கிய வங்கதேசம் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து 51 ஓவரில் 143 ரன்னுக்கு சுருண்டது. மோமினுல் ஹக் 11, மெகதி ஹசன் மிராஸ் 21, முஷ்பிகுர் ரகிம் 31, ஆரிபுல் ஹக் 41* ரன் எடுக்க, மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர். ஜிம்பாப்வே பந்துவீச்சில் சதாரா, சிக்கந்தர் தலா 3, ஜார்விஸ் 2, வில்லியம்ஸ் 1 விக்கெட் வீழ்த்தினர். 139 ரன் முன்னிலையுடன் 2வது இன்னிங்சை தொடங்கிய ஜிம்பாப்வே, 2ம் நாள் ஆட்ட முடிவில் விக்கெட் இழப்பின்றி 1 ரன் எடுத்துள்ளது.

^