பேட்டால் பதில் சொன்ன வார்னர்!

தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக கேப்டவுனில் நடந்த டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய வீரர் பந்தை சேதப்படுத்திய விவகாரம் கிரிக்கெட் உலகில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக ஸ்டீவ் ஸ்மித் மற்றும் டேவிட் வார்னர் ஆகியோர் சர்வதேச போட்டிகளில் விளையாட 12 மாதங்கள் தடைவிதித்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் உத்தரவிட்டது. இதனையடுத்து வார்னர் உள்ளுர் போட்டி தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறார். பங்களாதேஷ் ப்ரீமியர் லீக் தொடரில் சியல்ஹெட் சிக்சர்ஸ் அணிக்காக விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.சிட்னியில் நேற்று நடைபெற்ற போட்டியில் ராண்ட்விக் - பீட்டர்ஷேம் (Randwick-Petersham) அணிக்காக வார்னர் களமிறங்கினார். 35 ரன்கள் எடுத்திருந்த நிலையில் தான் போட்டி களத்தை விட்டு வெளியேறுவதாகவும் எதிரணியினர் கேலி செய்வதால் இதற்கு மேல் விளையாட முடியாது என கள நடுவரிடம் தெரிவித்து விட்டு வார்னர் வெளியேறினார். இதனால் அங்குப் பரபரப்பு ஏற்பட்டது. வார்னரின் இந்த செயலை எதிர்பார்க்காத வீரர்கள் அதிர்ச்சியடைந்தனர். பிறகு அவர்கள் வார்னரை சமாதானம் செய்தனர். இனி இதுபோல் நடைபெறாது என உறுதியளித்தனர். இதனையடுத்து வார்னர் மீண்டும் களத்திற்கு வந்தார்.சுமார் 2 நிமிடங்களுக்குப் பிறகு களத்திற்குத் திரும்பியவர் தனது அதிரடி ஆட்டத்தால் சதம் விளாசினார். கிரிக்கெட் போட்டியை பொறுத்தவரையில் ஒரு வீரர் காயம் காரணமாகவோ அல்லது வேறு காரணங்களால் போட்டி மைதானத்தை விட்டு வெளியேறினால். விதிகளின் படி கடைசி விக்கெட்டுக்கு தான் களமிறங்க முடியும். வார்னர் வெளியேறி விட்டு மீண்டும் உடனே களத்திற்கு திரும்பியது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

^