தொழில் செழிக்க அருள் தரும் தாண்டிக்குடி பாலமுருகன்

திண்டுக்கல்லிலிருந்து 80 கிமீ தூரத்தில் மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ளது தாண்டிக்குடி. இங்கு 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான பாலமுருகன் கோயில் உள்ளது. மூலவராக மேற்கு திசை நோக்கி முருகன் காட்சியளிக்கிறார். இங்கு கணபதி, முருகன், மயில், இடும்பன், பைரவர், அகஸ்தியர் மற்றும் நவக்கிரக சிலைகள் உள்ளன. பழநி தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோயிலில் உள்ள மூலவரின் சிலை போன்று இங்குள்ள மூலவரின் சிலை உள்ளது. கோயில் முன்பு வற்றாத தீர்த்தம் காணப்படுகிறது. கோயிலில் இருந்து 75 அடி தூரத்தில் ஒரு மண்மேடு உள்ளது. இதிலுள்ள மண் விபூதி போன்று நறுமணத்துடன் உள்ளது. அதிலிருந்து எடுக்கப்படும் மண் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது.


தல வரலாறு

ஒருமுறை பார்வதி சமேத சிவபெருமானை தரிசிக்க அகத்தியர் திருக்கயிலாயம் சென்றார். 2 பேரையும் வணங்கி விட்டு கிளம்பும்போது, அவருக்கு 2 குன்றுகளை சிவபெருமான் பரிசாக வழங்கினார். 2 குன்றுகளையும் அகத்தியரின் சீடரான இடும்பன் தோளில் சுமந்து கொண்டு மேற்குதொடர்ச்சி மலை நோக்கி வந்து கொண்டிருந்தார். இதனை கண்ட முருகப்பெருமான், 2 குன்றுகளில் ஒன்றை தனது இருப்பிடமாக்க முடிவு செய்தார். தான் இருந்த இடத்திலிருந்து தாண்டி குதித்து ஒரு குன்றின் மீது ஏறி அமர்ந்தார். இதனால் அந்த குன்று ‘தாண்டிக்குதி’ என்று அழைக்கப்பட்டது. காலப்போக்கில் மருவி, தற்போது தாண்டிக்குடி அழைப்படுகிறது.

தாண்டிக்குடியில் கோயில் கட்ட இடத்தை தேர்வு செய்த முருகப்பெருமான், தேவையான கட்டுமான பொருட்களை தருமாறு பக்தர்களின் கனவில் தோன்றி தெரிவித்தார். மூலவர் சிலை மற்றும் கோயில் கோபுரத்தை கட்டி தருமாறு ஸ்தபதி ஒருவரின் கனவில் தோன்றி தெரிவித்தார். இதன்பேரில் கோயில் கட்ட தேவையான பொருட்களை பக்தர்கள் வழங்கினர். முருகப்பெருமான் கூறியபடி, மூலவர் சிலை மற்றும் கோபுரத்தை அந்த ஸ்தபதியே கட்டி கொடுத்தார் என்பது புராணம்.

கந்த சஷ்டி, வைகாசி விசாகம், தைப்பூசம், பங்குனி உத்திரம், திருக்கார்த்திகை உள்ளிட்டவை இக்கோயிலின் விசேஷ தினங்களாகும். பங்குனி உத்திர திருவிழாவிற்கு பக்தர்கள் காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். செல்வம் பெருக, தொழில் செழிப்படைய வேண்டி பக்தர்கள் முருகப்பெருமானை வேண்டுகின்றனர். வேண்டுதல் நிறைவேறியவர்கள் முருகனுக்கு பாலாபிஷேகம் செய்தும், சிறப்பு பூஜை செய்தும் வழிபடுகின்றனர். தினமும் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை இக்கோயில் நடை திறந்திருக்கிறது.

^