நெல்லை எக்ஸ்பிரஸில் கொண்டு செல்லப்பட்ட ரூ.3.99 கோடி பணம் பறிமுதல்.. நயினார் நாகேந்திரனின் தேர்தல் செலவுக்கு கொண்டு செல்லப்பட்டதாகத் தகவல்..!

சென்னையில் இருந்து திருநெல்வேலிக்கு ரயிலில் கொண்டுசெல்லப்பட்ட 3 கோடியே 99 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.

ரகசிய தகவலின் அடிப்படையில், தாம்பரம் ரயில் நிலையத்தில் நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை மேற்கொண்டனர். அப்போது, கொளத்தூர் திரு.வி.க. நகரைச் சேர்ந்த சகோதரர்கள் சதீஷ், நவீன், ஸ்ரீவைகுண்டம் பகுதியைச் சேர்ந்த பெருமாள் ஆகியோர் வைத்திருந்த பைகளைச் சோதனையிட்டபோது, அவற்றில் கட்டுக்கட்டாக பணம் இருந்தது. இதையடுத்து மூன்று பேரையும் தாம்பரம் காவல் நிலையத்துக்குக் கொண்டு சென்று போலீஸார் விசாரணை நடத்தினர்.விசாரணையில், நயினார் நாகேந்திரனின் புரசைவாக்கம் ஹோட்டலில் இருந்தும், சேப்பாக்கத்தில் உள்ள அவரது உறவினரின் ஹோட்டலில் இருந்தும் நயினார் நாகேந்திரனின் தேர்தல் செலவுக்குப் பணம் எடுத்துச் செல்வதாகவும், திருநெல்வேலி ரயில் நிலையத்தில் தாங்கள் சொல்லும் நபரிடம் பணத்தை ஒப்படைக்கும்படி தங்களிடம் சொல்லப்பட்டதாகவும் போலீசாரிடம் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து நயினார் நாகேந்திரன் உறவினர் பெருமாள் உள்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.பறிமுதல் செய்யப்பட்ட பணம் தாம்பரம் தாசில்தார் நடராஜனிடம் ஒப்படைக்கப்பட்டது. அந்தப் பணம் அரசுக் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டு வருமானவரித் துறையிடம் தகவல் தெரிவிக்கப்படும் என்று நடராஜன் தெரிவித்தார்.

அதிகம் படித்தவை

^