ரயில்களில் அடிப்பட்டு ஒரே நாளில் 12 பேர் உயிரிழப்பு

ரயில் தண்டவாளங்களை கடக்க முயற்சி, கவனக்குறைவான பயணம், தற்கொலை சம்பவம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் மும்பையில் நேற்று ஒரே நாளில் 12 பேர் ரயில்களில் அடிப்பட்டு பலியாகியுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்திய ரயில்வே துறை சார்பாக ரயில்வே கிராசிங்குகள் உள்ளிட்டவற்றை கடக்கும் போது கவனமாக கடந்து செல்ல அறிவுறுத்தப்பட்டு வருகிறது. அதே போல ரயில் நிலையங்களில் தண்டவாளத்தை கடக்க கூடாது எனவும் அறிவுறுத்தப்படுகிறது. எனினும் பயணிகள் மற்றும் பொதுமக்கள் இதனை கவனத்தில் கொள்ளாமல் அலட்சியப்படுத்துவதால் ரயில் மோதி உயிர்ப்பலி ஏற்படுவது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மக்கள் தொகை அதிகம் உள்ள மும்பை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் நேற்று மட்டும் ரயில் மோதியதில் 12 பேர் உயிரிழந்துள்ளனர். 5 பேர் காயமடைந்துள்ளனர்.தண்டவாளத்தை கடந்த போது, அதிக கூட்ட நெரிசலினால் ரயிலில் இருந்து தவறி விழுந்தும், தற்கொலை செய்தும் உயிரிழந்துள்ளனர். தானே மாவட்டம் மற்றும் கல்யாண் நகரில் தலா 3 பேர் உயிரிழந்துள்ளனர். மும்பை வடாலா பகுதியில் 2 பேரும், குர்லா, மத்திய மும்பை, பாந்த்ரா, டோம்பிவிலி பகுதியில் தலா ஒருவரும் ரயிலில் அடிபட்டு இறந்துள்ளதாக ரயில்வே காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு மும்பை மற்றும் புறநகர்ப் பகுதியில் மொத்தம் 3,014 பேர் ரயில்களில் அடிபட்டு இறந்ததாக, தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் பெறப்பட்ட பதில் மனுவில் ரயில்வே காவல்துறை கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது

^