அமெரிக்காவின் எம்.777 உட்பட ராணுவத்தில் புதிதாக 3 பீரங்கிகள் சேர்ப்பு

அமெரிக்காவிடம் இருந்து வாங்கப்பட்ட எம்.777 இலகு ரக பீரங்கிகள் உட்பட 3 பீரங்கிகள் மற்றும் வாகனங்களை பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் ராணுவத்தில் இணைத்தார். ஈரான், ஆப்கானிஸ்தான் போரில் அமெரிக்க ராணுவம் எம்.777 இலகு ரக பீரங்கிகளை பயன்படுத்தியது. இவற்றை ஹெலிகாப்டர்கள் மூலம் உயரமான இடங்களுக்கு எளிதில் எடுத்துச் செல்ல முடியும். இந்நிலையில், 145 எம்.777 பீரங்கிகளை அமெரிக்காவிடம் இருந்து ரூ.5,070 கோடிக்கு வாங்க கடந்த 2016ம் ஆண்டு இந்தியா ஒப்பந்தம் செய்தது. இந்த பீரங்கிகளை அமெரிக்கா இந்தியாவுக்கு சப்ளை செய்ய தொடங்கியுள்ளது. இவற்றை ராணுவத்தில் சேர்க்கும் நிகழ்ச்சி மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள தியோலாலி என்ற இடத்தில் நேற்று நடந்தது. இத்துடன் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கே-9 வஜ்ரா டேங்க் மற்றும் ராணுவத்தில் தற்போது உபயோகத்தில் உள்ள பீரங்கிகளை இழுத்துச் செல்லும் வாகனம் (சிஜிடிவி) ஆகியவையும் இணைக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டார். முதல் பீரங்கி படைப்பிரிவில் அடுத்தாண்டு ஜூன் மாதத்துக்குள் 18 எம்.777 ரக பீரங்கிகளும் கே-9 வஜ்ரா டேங்க்குகளும் இணைக்கப்பட உள்ளன.

^