வெஸ்ட் இண்டீசுடன் முதல் டி20 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி

வெஸ்ட் இண்டீஸ் அணியுடனான முதல் டி20 போட்டியில், இந்திய அணிக்கு 110 ரன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாசில் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் ஷர்மா, முதலில் பந்துவீச முடிவு செய்தார். ஆல் ரவுண்டர் குருணல் பாண்டியா, வேகப் பந்துவீச்சாளர் கலீல் அகமது இருவரும் அறிமுக வீரர்களாக இடம் பெற்றனர். தினேஷ் கார்த்திக் விக்கெட் கீப்பராக செயல்பட்டார். வெஸ்ட் இண்டீஸ் அணியில் ஆலன், பியரி, தாமஸ் அறிமுகமாகினர். தொடக்க வீரர்களாக ஷாய் ஹோப், ராம்தின் களமிறங்கினர். ராம்தின் 2 ரன் எடுத்து உமேஷ் வேகத்தில் கார்த்திக் வசம் பிடிபட, ஹோப்14 ரன் எடுத்த நிலையில் பரிதாபமாக ரன் அவுட்டானார். அடுத்து வந்த ஹெட்மயர் 10 ரன்னில் வெளியேற, போலார்டு 14 ரன் எடுத்து குருணல் சுழலில் விக்கெட்டை பறிகொடுத்தார். டேரன் பிராவோ 5, ரோவ்மன் பாவெல் 4, கேப்டன் பிராத்வெயிட் 4 ரன் எடுத்து குல்தீப் சுழலில் அணிவகுக்க, வெஸ்ட் இண்டீஸ் அணி 63 ரன்னுக்கு 7 விக்கெட் இழந்து தடுமாறியது.பேபியோ ஆலன் அதிகபட்சமாக 27 ரன் (20 பந்து, 4 பவுண்டரி) எடுத்து கலீல் வேகத்தில் உமேஷிடம் பிடிபட்டார். வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 109 ரன் எடுத்தது. கீமோ பால் 15 ரன், பியரி 9 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்திய பந்துவீச்சில் குல்தீப் 3, குருணல், உமேஷ், கலீல், பூம்ரா தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து 20 ஓவரில் 110 ரன் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் இந்தியா களமிறங்கியது. தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா, தவான் களம் இறங்கினர். ரோகித் 6 ரன்னிலும், தவான் 3 ரன்னிலும் அவுட்டாக சற்று தடுமாறியது இந்தியா. பின் களம் வந்த ராகுல் தாக்குப்பிடித்து ஆட, வந்த வேகத்தில் திரும்பினார் ரிஷப் பன்ட் (1). பின்னர் மணிஷ் பாண்டே ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி 10 ரன் சேர்த்த போது ராகுல் 16 ரன்னில் அவுட்டாகி வெளியேறினார். மணிஷ் பாண்டே, தினேஷ் கார்த்திக் ேஜாடி 38 ரன் ேசர்த்த போது, மணிஷ் பாண்டே 19 ரன்னில் வெளியேற, பின்னர் களமிறங்கிய குர்ணல் பாண்டியா, தினேஷ் கார்த்திக்குடன் ஜோடி ேசர்ந்தார். இந்த ஜோடி நிதான ஆட்டம் ஆடினர். 17.5 ஓவரில் 110 ரன் எடுத்து இந்தியா வெற்றி பெற்றது. தினேஷ் கார்த்திக் 31 ரன்னும், குர்ணல் பாண்டியா 21 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். 3 போட்டிகள் ெகாண்ட டி20 போட்டியில் முதல் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது. 

^